உலகம்

''என் சிறு வயது கனவு இது'' - விமானம் தயாரித்து வானில் பறந்த பாப்கார்ன் வியாபாரி!

''என் சிறு வயது கனவு இது'' - விமானம் தயாரித்து வானில் பறந்த பாப்கார்ன் வியாபாரி!

webteam

பாகிஸ்தானைச் சேர்ந்த பாப்கார்ன் வியாபாரி ஒருவர் சொந்தமாக விமானத்தை வடிவமைத்து அசத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அரிஃப்வாலா கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது பயாஸ். இவரது கனவு, சொந்தமாக விமானம் தயாரிக்க வேண்டும் என்பது. பகலில் பாப்கார்ன் வியாபாரி, இரவு நேரத்தில் செக்யூரிட்டி என முகமது பயாஸ் உழைத்து பணம் சேர்த்து அவரது கனவை நினைவாக்கியுள்ளார்.

தற்போது 32 வயதான முகமதுவுக்கு சிறிய வயதில் விமானப்படையில் வேலையில் சேர வேண்டுமென்பது ஆசை. ஆனால் சூழ்நிலை அவருக்கு கைகொடுக்கவில்லை. முகமது பள்ளி படிக்கும் காலத்திலேயே அவரது தந்தை இறந்துபோக பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டார். கிடைக்கும் வேலைக்கு சென்று தனது அம்மாவுக்கும், 5 உடன்பிறந்தவர்களுக்கும் உதவியாக இருந்துள்ளார்.

வருடங்கள் ஓடினாலும் தனக்குள் உள்ள கனவை மட்டும் அவர் கலைக்கவே இல்லை. விமானப்படையில் சேர வேண்டும்  என்பதையும் தாண்டி சொந்தமாகவே விமானம் தயாரிக்க திட்டமிட்டார் முகமது. தனக்கு சொந்தமான நிலத்தை விற்றார், ரூ.50 ஆயிரம் வங்கிக்கடன் பெற்றார். தான் சேமித்த வைத்த பணத்தையும் சேர்த்து சொந்தமாக ரூ.1 லட்சத்தில் விமானம் ஒன்றை தயாரித்துவிட்டார் முகமது.

ரோடு வெட்டும் இயந்திரத்தில் இருந்து எஞ்சின், ஆட்டோவின் டயர்கள் என கிடைக்கும் பொருட்களை வைத்துக்கொண்டு இணையத்தில் தகவல்களை சேகரித்து இந்த விமானத்தை தயாரித்ததாக முகமது தெரிவிக்கிறார். மேலும் விமானத்தில் ''நான் பறக்கும் போது வேறு எதுவுமே என் மனதில் ஓடாது'' என்று நெகிழ்ச்சியாக தெரிவிக்கிறார்.

போலீசாரின் அனுமதி இல்லாமல் விமானத்தில் பறந்து சோதனை செய்ததால் முகமதுவை கைது செய்த போலீசார் ரூ.3000 அபராதமும் விதித்தனர். தற்போது விமானத்துறையிடன் உரிய அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார் முகமது. மேலும் தன்னுடைய அடுத்தக்கட்ட முயற்சிகளுக்கு அரசு தொழில்நுட்ப உதவிகள் வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.