பாம்பு, முதலைகளை வைத்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடியை மிரட்டிய பிரபல பாகிஸ்தான் பாப் பாடகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகி ரபி பிர்ஸாடா (Rabi Pirzada). இவர் தனது ட்விட்டரில் கடந்த சில நாட்களுக்கு முன் வீடியோ ஒன்றைப் பதிவிட்டார். அதில் கையில் விஷ பாம்புகளை வைத்துள்ளார். தரையில் சில மலைப்பாம்புகளும், முதலையும் கிடக்கின்றன. அவற்றை குறிப்பிட்டு பேசும் ரபி, “நான் காஷ்மீரி பெண். இந்த பரிசு உண்மையில், மோடிக்காக. நீங்கள் காஷ்மீர் மக்களை துன்புறுத்துகிறீர்கள். அதனால் உங்களுக்காக இவற்றை தயார் செய்துள்ளேன். நீங்கள், நரகத்தில் இறக்க தயாராக இருங்கள், சரியா? எனது இந்த நண்பர்கள் உங்களுக்கு விருந்து வைப்பார்கள்” என்று கூறுகிறார். பாடலையும் பாடுகிறார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பானது. இதையடுத்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு, சட்டவிரோதமாக விலங்குகளை வீட்டில் வைத்திருந்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றமும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 2 வருடம் வரை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.