உலகம்

பாகிஸ்தானில் கூலித் தொழிலாளியின் நெகிழ்ச்சியூட்டும் நேர்மை !

webteam

பாகிஸ்தானில் கூலித்தொழிலாளி ஒருவர் தன்னுடைய நேர்மையால் இணையத்தில் ஹீரோவாகியுள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஷேஷன் ஹடாக் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வீட்டில் நடந்த சம்பவத்தை பகிர அது இணையத்தில் ஹிட் அடித்துள்ளது. அவர் பதிவின்படி,  ''தொழிலாளி ஒருவர் எங்களது வீட்டிற்கு அருகே உள்ள நிலத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். திடீரென்று வீட்டுக்கதவை தட்டினார். எனது சகோதரன் கதவை திறந்தான். 'உங்கள் வீட்டில் இதற்கு முன்பு நகை எதாவது தொலைந்து போயுள்ளதா' என்று அவர் கேட்டார். 'ஆமாம் ஒரு ஜோடி காதணிகள் தொலைந்து போனது. ஆனால் அது தொலைந்தது 2015ம் ஆண்டு' என்று பதிலளித்தார் எனது சகோதரன். உடனே அந்த தொழிலாளி தனது பாக்கெட்டில் இருந்து காதணியை எடுத்துக்கொடுத்தார். நிலத்தில் கிடந்ததாக அவர் கூறினார்'' என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் ''அவர் நேர்மை என்னை நெகிழ்ச்சி அடையச்செய்தது. உடனடியாக அவருக்கு எதாவது கொடுக்க வேண்டுமென குறிப்பிட்ட தொகையை சன்மானமாக வழங்கினேன். ஆனால அவர் ஏற்க மறுத்துவிட்டார். விடாப்பிடியாக அவரிடம் கொடுக்க முயன்றேன் ஆனால் அவர் வாங்கவே இல்லை. பதிலுக்கு 'உங்களது பரிசு வேண்டாம், நான் கடவுளின் பரிசுக்காகவே காத்திருக்கேன்' என்று பதில் அளித்தார்'' என்று தெரிவித்தார்.

இந்த நேர்மை பாகிஸ்தான் மட்டுமல்லாது எல்லைகள் கடந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இவரை போல நேர்மையான ஆட்களை பார்ப்பது அரிது என்றும், சில மனிதர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள ஏராளமாக உள்ளது என்றும் பலர் அவரது ட்விட்டை பகிர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.