அமெரிக்காவில் நடைபெற்ற 47வது அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அமோக வெற்றிபெற்றுள்ளார். விரைவில் பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தாம் ட்ரம்பின் மகள் எனத் தெரிவித்து பகீர் கிளப்பியுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. செய்தியாளர்களிடம் பேசும் அவர், "எனது தந்தை ட்ரம்ப். என்னை சரியாக பார்த்துக்கொள்ளவில்லை என எனது தாயாரை, அவர் எப்போதும் திட்டிக் கொண்டே இருப்பார். இதன் காரணமாகவே நாங்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டோம். தான் ஒரு இஸ்லாமியப் பெண். தனக்கு இந்தி மற்றும் உருது மொழிகள் தெரியும்” என அதில் தெரிவித்துள்ளார்.
இணையத்தில் வைரலாகிவரும் நிலையில், இது பழைய வீடியோ என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். பிரபலமானவர்கள் குறித்து அவ்வப்போது இதுபோன்ற வதந்திகள் பரப்பப்படுவது அடிக்கடி நடக்கும் ஒன்றுதான் என்று வீடியோ குறித்து பலர் கமென்ட் தெரிவித்திருக்கிறார்கள்.
டொனால்டு ட்ரம்ப் முதன்முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஒரு வருடத்திற்குப் பிறகு, 2018 ஆம் ஆண்டிலும் இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அப்போது இந்த வீடியோவைப் பகிர்ந்த பாகிஸ்தானின் டிஜிட்டல் மீடியா தளமான சியாசட், இதுகுறித்த செய்தியையும் வெளியிட்டிருந்தது.
முன்னதாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகள் எனக் கூறிக்கொண்டு சிலர் பேட்டியளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.