சர்தாஜ் குல் எக்ஸ் தளம்
உலகம்

”என் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்” - சபாநாயகரிடம் வேண்டுகோள் வைத்த பாகிஸ்தான் பெண் எம்.பி! #Video

Prakash J

அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த நிலையில், 3 முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து, தீவிர பேச்சுவார்த்தைக்குப் பின் கூட்டணி அரசை அமைக்க ஒப்புக்கொண்டன. அதன்படி, பாகிஸ்தானின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப், 2வது முறையாக பதவியேற்றார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. இதில் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த பெண் எம்பியான சர்தாஜ் குல், சபையில் காரசாரமாகப் பேசினார்.

இதையும் படிக்க: ராகுல் டிராவிட்டிற்கு மீண்டும் பதவி வழங்கப்படாதது ஏன்?.. பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன?

சபாநாயகர் அயாஸ் சாதிக், தன் முன்னால் இருந்த கோப்புகளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். இதனால் எரிச்சலடைந்த எம்பி சர்தாஜ் குல் சபாநாயகரை பார்த்து, “நான் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியின் எம்பியாக உள்ளேன். என்னை நம்பி 1.50 லட்சம் மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். ஆனால், நான் பேசும்போது நீங்கள் என் முகத்தைக்கூடப் பார்ப்பதில்லை. எப்போது பேசினாலும் எதிரில் இருப்பவர் கண்களை நேருக்குநேர் பார்த்தபடி பேசும்படி என் கட்சி தலைவர்கள் எனக்கு கற்றுத் தந்துள்ளனர்.

நீங்கள் என் கண்களைத் தவிர்ப்பதால் என்னால் தொடர்ந்து பேச முடியவில்லை. தயவுசெய்து கண்ணாடியை அணிந்துகொண்டு என் கண்களைப் பாருங்கள்” என்றார்.

இதை கேட்டு சற்று அதிர்ந்துபோன சபாநாயகர், “நீங்கள் பேசுங்கள், நான் கேட்கிறேன். பெண்களின் கண்கள் பார்த்துப் பேசுவது முறையாகாது. நான் அதை எப்போதும் தவிர்த்துவிடுவேன்” என்றார். இதை கேட்ட பெண் எம்பி உட்பட சபையில் சிரிப்பலை எழுந்தது. இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: ’இன்னும் ஒரு வேலை இருக்கிறது..’ ஓய்வுபெற்ற விராட் கோலியிடம் இறுதியாக அறிவுரை கூறிய ராகுல் டிராவிட்!