உலகம்

விரும்பத்தகாத விளைவுகளை சந்திக்க நேரிடும் - இந்தியாவை எச்சரித்த பாகிஸ்தான்:என்ன காரணம்?

விரும்பத்தகாத விளைவுகளை சந்திக்க நேரிடும் - இந்தியாவை எச்சரித்த பாகிஸ்தான்:என்ன காரணம்?

Sinekadhara

இந்தியாவின் சூப்பர்சோனிக் ஏவுகணை ஒன்று பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்து தாக்கியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்ந்தால் இந்தியா விரும்பதகாத விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தான் எச்சரித்திருக்கிறது.

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை அழைத்து இந்த அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவித்ததாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் ஒரு அறிக்கையில், "இதுபோன்ற அலட்சியத்தால் ஏற்படும் அசம்பாவிதங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற மீறல்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் இந்தியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையே எல்லை பிரச்னை தொடர்ந்து இருந்துவரும் நிலையில், ஹரியானாவின் சிர்சாவிலிருந்து வந்த ஏவுகணை பாகிஸ்தானின் மியான் சன்னு நகரின் அருகே விழுந்தது பாகிஸ்தான் ராணுவத்தால் கண்டறியப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் பங்கேற்குமாறு பாகிஸ்தான் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

தேசிய மற்றும் சர்வதேச பயணிகள் விமானங்கள் செல்லும் வழியாக இந்த ஏவுகணை சென்றுள்ளதால் உயிர்கள் மற்றும் பொருட்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக இது இருப்பதாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஆனால் இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.