உலகம்

”ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க ரெடி! ஆனால், இந்தியாவைப் போல்”-பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை

”ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க ரெடி! ஆனால், இந்தியாவைப் போல்”-பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை

Abinaya

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை பாகிஸ்தான் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தியாவுக்கு கொடுக்கும் விலையில் கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

ரஷ்யா- உக்ரைன் போரில், உக்ரைன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வந்தன. ஆனால் ரஷ்யா அதை பொருட்படுத்தவில்லை. இதனை தொடர்ந்து, ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. கச்சா எண்ணெய் வாங்கவும் தடை விதித்தது. இருப்பினும், அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை வாங்கி வந்தது. இந்தியாவின் நடவடிக்கையால், அமெரிக்க உட்பட மற்ற மேற்கத்திய நாடுகள் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இந்தியாவை போலவே பாகிஸ்தானுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. 2020- 21 நிதியாண்டில் மட்டும் 1.92 பில்லியன் டாலர் அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. சமீபத்தில் தான் பாகிஸ்தான் பெரு வெள்ளத்தால் பேரழிவை சந்தித்துள்ளது. அதனால் கச்சா எண்ணெய் விலையில் சலுகை கிடைத்தால் பெரும் உதவியாக இருக்கும் என பாகிஸ்தான் நினைக்கிறது. பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம் பாதிப்புகள் மேற்கத்திய நாடுகளுக்கு புரியும் என்பதால் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்காது என நினைக்கிறோம் என பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்குவதற்கு முன்பே அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து ஆலோசனை நடத்துவதாக இருந்ததார். அப்போது அமெரிக்கா பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ”ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க விரும்புகிறது பாகிஸ்தான். ஆனால் இந்தியாவிற்கு வழங்கும் சலுகை விலையில் வழங்கினால், அதனை வாங்க தயாராக உள்ளோம். தற்போது தான் வெள்ள பாதிப்புகளின் பேரழிவுகளை எதிர்கொண்டுள்ளோம் என்பதால் மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்காது என நம்புகிறோம் ‘’ என அமெரிக்கவுக்கு சென்றுள்ள நிதியமைச்சர் இஷாக் தர் பேசியுள்ளார்.