உலகம்

பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தானும் கண்டனம்!

பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தானும் கண்டனம்!

webteam

காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று  திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள பாகிஸ்தான், இந்த தாக்குதலுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது. 

காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் 2 ஆயிரத்து 547 பேர் ஜம்முவில் இருந்து, 78 வாகனங்களில் பள்ளத்தாக்கு பகுதிக்கு நேற்று சென்று கொண்டிருந்தனர். வழக்கமாக ஒரே நாளில் ஆயிரம் வீரர்கள் அணிவகுத்து செல்வது வழக்கம். ஆனால் கடந்த 2, 3 நாட்களாக மோசமான வானிலை மற்றும் நிர்வாக காரணங்களால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. அதனால்தான் வீரர்கள் ஒரே நாளில் 78 வாகனங்களில் மொத்தமாக சென்றனர்.

ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புலவாமா மாவட்டம், அவந்திப்போரா அருகே சென்று கொண்டிருந்தபோது, தற்கொலை படை பயங்கரவாதி நடத்திய, வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 44 பேர் உயிரிழந்தனர். 20 வீரர்கள் படு காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இது கோழைத்தனமான செயல் என உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில், பாகிஸ்தானும் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி  வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்த தாக்குதல் மிகவும் கவலைக்குரியது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். விசாரணை நடத்தாமலே இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் மீது பழி போடும் இந்திய அரசு மற்றும் இந்திய ஊடகங்களின் கருத்துக்களை நிராகரிக்கிறோம். இதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. 

(மசூத் அசார்)

பயங்கரவாத செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும், ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத் தலைவர் மசூத் ஆசாருக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து வருகிறது. இதைச் சுட்டிக்காட்டி இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த தாக்குதலுக்கும் அந்த அமைப்பே பொறுப்பேற்றிருப்பதால், இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.