உலகம்

டிக்டாக் கணக்கை தடை செய்த பாகிஸ்தான் அரசு - மாற்று வழியில் மியா கலீஃபா பதிலடி!

டிக்டாக் கணக்கை தடை செய்த பாகிஸ்தான் அரசு - மாற்று வழியில் மியா கலீஃபா பதிலடி!

நிவேதா ஜெகராஜா

ஊடகப் பிரபலமான மியா கலீஃபாவின் டிக்டாக் கணக்கை மூன்றாவது முறையாக முடக்கி இருக்கிறது பாகிஸ்தான் அரசு. இதற்கு, மியா கொடுத்துள்ள பதில், தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.

தனது டிக் டாக் கணக்கை பாகிஸ்தான் அரசு முடக்கியதை உறுதிபடுத்திய மியா கலீஃபா பதிந்த ட்வீட்டில், "எனது டிக்டாக் கணக்கை நாட்டிலிருந்து தடை செய்ததற்காக பாகிஸ்தானுக்கு எதிராக குரல் கொடுங்கள். பாசிசத்தைத் தவிர்க்க விரும்பும் எனது பாகிஸ்தான் ரசிகர்களுக்காக எனது அனைத்து டிக்டாக் வீடியோகளையும் இப்போதிலிருந்து ட்விட்டரில் பதிவிடுகிறேன்" என்று கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் எந்தவொரு அறிவிப்பும் விடுக்காமல் மியாவின் டிக்டாக் கணக்கை தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பின்னணியில் உள்ள காரணம் குறித்தும் தகவல் தொடர்பு ஆணையம் இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. கடந்த காலங்களில் இதுபோல் இரண்டு முறை மியா கலீஃபாவின் டிக்டாக் கணக்கை தடை செய்து பின்னர் அதனை விடுத்துள்ளது பாகிஸ்தான் அரசு. "ஒழுக்கக்கேடான மற்றும் நெறிமுறையற்ற" வீடியோக்கள் இருப்பதாக கூறி இரண்டாவது தடை விதிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த இரண்டாவது தடை டிக்டாக் வழங்கிய நெறிமுறைகளின்படி நீக்கப்பட்டது என்று 'அல் ஜசீரா' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை தடை விதிக்கப்பட்டதை மியாவின் ரசிகர் ஒருவரே அவருக்கு ட்விட்டர் மூலம் அறிவித்தார். அதன்பிறகே மியாவுக்கு இதுகுறித்து தெரியவந்தது. இதையடுத்து ரசிகரின் செய்தியை மேற்கோளிட்டு ட்வீட் செய்தார். மியாவை டிக்டாக்கில் 22.2 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். மேலும், தனது வீடியோக்களுக்கு இதுவரை, 270 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளும் பெற்றுள்ளார்.

மியா கலீஃபா கடந்த காலங்களில் ட்விட்டரில் பல விஷயங்கள் பற்றி கருத்து தெரிவித்து வருகிறார். முன்னதாக மே மாதத்தில், ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியை இஸ்ரேலிய படைகள் தாக்கிய பின்னர், மியா கலீஃபா பல ட்வீட்களை வெளியிட்டு, "நான் 'லெபனானுக்காக ஜெபிக்கிறேன்' என்று சொல்வது போல் #FreePalestine என்று சத்தமாக சொல்கிறேன்" என்று பதிவிட்டு இருந்தார்.

இதேபோல், பிப்ரவரியில், மியா கலீஃபா இந்தியாவில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்தார். "என்ன மாதிரியான மனித உரிமை மீறல் இது? புதுடெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது?" என்று அப்போது ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.