ஷாஜியா மன்சூர், ஷெர்ரி நன்ஹா ட்விட்டர்
உலகம்

முதலிரவு குறித்த கேள்வி: டி.வி. நேரலையில் காமெடி நடிகரைத் தாக்கிய பிரபல பாகிஸ்தான் பாடகி!

பாகிஸ்தானில் டிவி நேரலை நிகழ்ச்சி ஒன்றில், முதலிரவு குறித்து கேள்வி கேட்ட நகைச்சுவை நடிகரை, பிரபல பாடகி சரிமாரியாக தாக்கிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prakash J

பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பாடகி ஷாஜியா மன்சூர். இவர் அந்த நாட்டின் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். அப்போது அவருடன் உரையாடிய காமெடி நடிகர் ஷெர்ரி நன்ஹா என்பவர், ‘நான் உங்களைத் திருமணம் செய்துகொண்டால், ஹனிமூனுக்கு உங்களை உடனடியாக மான்டே கார்லோவுக்கு அழைத்துச் செல்வேன். நீங்கள் எந்த வகுப்பில் பயணிக்க விரும்புவீர்கள் என்று சொல்ல முடியுமா’ என நகைச்சுவையாக கேட்பதாக நினைத்துக்கொண்டு ஆபாசமாக கேட்கிறார்.

இதனால் கடும் கோபமடைந்த பாடகி ஷாஜியா, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து கோவம் தணியாமல் அவரைச் சரிமாரியாகத் தாக்கினார்.

அத்துடன் அவரை, ’மூன்றாம் வகுப்பில் பயணிக்கும் நபர்’ என ஷாஜியா விமர்சனம் செய்தார். பின் இதுபற்றி ‘கடந்த முறையும் இப்படித்தான் நடந்தது. அப்போது எனது கோபத்தை பிராங்க் எனக் கூறி மூடி மறைத்தேன். ஆனால், இந்த முறை அப்படி இருக்க முடியாது. நீங்கள் பெண்களிடம் இப்படித்தான் பேசுவீர்களா..? ஹனிமூன் என்கிறீர்கள்’ என்றுகூறி கடுமையாகத் திட்டினார்.

இதையும் படிக்க: துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய திருடர்கள்.. தங்கச் சங்கிலியைத் தராமல் காரணம் சொன்ன முதியவர்

பின்னர் நிகழ்ச்சித் தொகுப்பாளர் குறுக்கிட்டு, ‘இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க ஸ்கிரிப்டை மட்டும் கலைஞர்கள் பின்பற்ற வேண்டும். அதைத் தாண்டி எதுவும் பேசவேண்டாம்’ என்று காமெடி நடிகர் நன்ஹாவிடம் கூறினார். எனினும் ஆத்திரம் தீராத ஷாஜியா, ஸ்டூடியோவைவிட்டு வெளியேறினார். ‘இனி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டேன்’ என்று கூறிவிட்டுச் சென்றார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டவண்ணம் உள்ளனர். பெரும்பாலான பயனர்கள், இந்த வீடியோ குறித்த நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். ‘இதுவும் ஸ்கிரிப்ட் செய்யப்பட்டதாக இருக்குமோ’ என்று சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

ஒருவேளை இதுவும் ஸ்கிரிப்ட்டாக இருந்தாலும்கூட, தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களில் காமெடி எனும் பெயரில் ஆபாசமாக இரட்டை அர்த்த வசனங்களை பேசாதீர்கள் என்று இந்த வீடியோ அழுத்தமாகச் சொல்கிறது. அதை நாமும் பின்பற்றவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை!

இதையும் படிக்க: AFG vs IRE | இன்னிங்ஸைத் தொடங்கி வைத்த மாமா - மருமகன் இணை... ஆப்கன் அணியில் அரங்கேறிய சுவாரஸ்யம்!