உலகம்

பாகிஸ்தானின் புதிய பிரதமர்... யார் இந்த ஷாகித் அப்பாஸி?

பாகிஸ்தானின் புதிய பிரதமர்... யார் இந்த ஷாகித் அப்பாஸி?

webteam

பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ஷாகித் கஹாகான் அப்பாஸி, நவாஸ் ஷெரீஃப் தலைமையிலான அமைச்சரவையில் பெட்ரோலியம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். 

பாகிஸ்தான் சர்வதேச விமானநிறுவனத்தின் தலைவராக 1997 முதல் 1999ம் ஆண்டு வரை பதவி வகித்தவர். தீவிர நவாஸ் ஷெரீஃப் ஆதரவாளராக அறியப்பட்ட அப்பாஸி, தனியார் விமான நிறுவனமான ஏர் ப்ளூ (Air Blue) நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாகவும் பதவி வகித்து வருகிறார். 

நவாஸ் ஆட்சியை ஜெனரல் பர்வேஸ் முஷாராப் தூக்கி எறிந்தபோது, ராணுவத்தால் கைது செய்யப்பட்ட அப்பாஸி, 2 ஆண்டுகள் சிறையில் கழித்தார். பின்னர், 2001ல் அவர் விடுதலை செய்யப்பட்டார். அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிகல் எஞ்சினியரிங் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். கடந்த 1988ம் ஆண்டு முதல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அப்பாஸி, 6 முறை எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமராக அவர் பதவியேற்பதற்கு முன் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிகிறது. பாகிஸ்தான் இடைக்காலப் பிரதமராக 45 நாட்கள் பதவி வகிக்க இருக்கும் அப்பாஸியைத் தொடர்ந்து புதிய பிரதமராக நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் ஷேபாஸ் ஷெரீஃப் பதவியேற்பார்.