உலகம்

"கடன் கேட்பதற்கு சங்கடமாக இருக்கிறது..."- மனம் நொந்து பேசிய பிரதமர்!

"கடன் கேட்பதற்கு சங்கடமாக இருக்கிறது..."- மனம் நொந்து பேசிய பிரதமர்!

webteam

“கடன் கேட்பது மிகவும் சங்கடமாக இருக்கிறது” என பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். 

இலங்கையைப் போன்றே இந்தியாவின் இன்னொரு அண்டை நாடான பாகிஸ்தானும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் போராட்டம் வெடித்து, பின் புதிய ஆட்சி மலர்ந்தது. ஆனாலும், இன்னும் அங்கு நிலைமை முழுவதுமாக மீளவில்லை. அதே பொருளாதார நெருக்கடிதான் தற்போது பாகிஸ்தானிலும் ஏற்பட்டுள்ளது. அங்கு கடும் பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி இம்ரான் கான் ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனாலும் புதிய பிரதமராய் தேர்வான ஷாபாஸ் ஷெரீஃப் ஆட்சியிலும் அதேநிலை தொடர்வதுதான் வேதனை.

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி

அதிகரித்து வரும் கடன், பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி செலவுகள், குறைந்துவரும் அந்நியச் செலாவணி கையிருப்பு, உலகளாவிய பணவீக்கம், அரசியல் நிச்சயமற்ற தன்மை, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் தொடர்ச்சியான வீழ்ச்சி எனப் பலவற்றால் பாகிஸ்தான் அரசாங்கம் கடுமையான பொருளாதாரச் சரிவைச் சந்தித்து வருகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளமும் அந்நாட்டின் வளர்ச்சியை முடக்கிப் போட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் மின்சாரம் மற்றும் சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விலை உயர்வு

இதைவிடக் கொடுமை, அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, அத்தியாவசிய உணவுப்பொருளான கோதுமை மாவின் 20 கிலோ பாக்கெட் ரூ.3,100க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ சர்க்கரை ரூ.155க்கும், 1 கிலோ வெங்காயம் ரூ.280க்கும் (கடந்த வாரம் ரூ.240க்கு விற்கப்பட்டது), 1 கிலோ கோழிக்கறி ரூ.700க்கும் விற்கப்படுகிறது.

பொருட்களின் கடுமையான தட்டுப்பாடுகளால் பாகிஸ்தானின் விலைவாசி உயர்வு 23 சதவீதம் அதிகரித்திருக்கும் நிலையில், அங்கு அத்தியாவசிய உணவுக்கே தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கோதுமைக்காக பொதுமக்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொள்ளும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

கடன் பெறும் பாகிஸ்தான்

பாகிஸ்தானின் பொருளாதாரம் இப்போது முழுக்க முழுக்க கடன் வாங்கிய பணத்தில்தான் இயங்கி வருகிறது. கடந்த ஜனவரி 6 ஆம் தேதி நிலவரப்படி, அதன் அன்னியச் செலாவணி கையிருப்பு 4.34 பில்லியன் டாலராக இருந்தது. அதில் பெரும்பாலானவை பிற நாடுகளின் கடனாக வந்துள்ளது. ஆம், கடந்த வாரம் சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளிடமிருந்து சுமார் 4 பில்லியன் டாலரை பாகிஸ்தான் கடனாகப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், நாடு இப்படி கடன் வாங்குவது குறித்து பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். “பாகிஸ்தானுக்கு இது புதிய மூச்சுக்காற்றாக இருக்கலாம். ஆனால் நாடு உடனே பொருளாதாரத்தைப் புதுப்பிக்க வேண்டும். இல்லையெனில் இதைத் திருப்பிச் செலுத்த மேலும் ஒருவரிடமிருந்து கடன் வாங்க வேண்டும். இதன்மூலம், கூடுதல் கடன்கள் பாகிஸ்தானின் கடன் சுமையை அதிகரிக்கவே செய்யும்” என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

மனம் நொந்த பாகிஸ்தான் பிரதமர்

இந்த நிலையில், பாகிஸ்தான் நிர்வாக சேவையின் (பிஏஎஸ்) தகுதிக்கான அதிகாரிகளின் தேர்ச்சி விழாவில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், ”அணுசக்தி நாடு, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவரும் நிலையில் கடன்பெற வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது வெட்கக்கேடானது. கடன் கேட்பது மிகவும் சங்கடமாக இருக்கிறது. பாகிஸ்தானின் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள வெளிநாட்டுக் கடன்களை நாடுவது சரியான தீர்வாகாது. கடந்த பல ஆண்டுகளாகவே யாராலும் இந்தப் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.