இம்ரான் கான், நவாஸ் ஷெரீப் ட்விட்டர்
உலகம்

பாகிஸ்தான்: அதிக இடங்களில் இம்ரான் கான்.. மோசடி செய்தாரா நவாஸ் ஷெரீப்? உற்றுநோக்கும் உலக நாடுகள்!

பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மோசடிகள் நடைபெற்று இருக்கலாம் என உலக நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.

Prakash J

பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தல்

அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. அன்றைய தினம் காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இத்தேர்தலில் பல்வேறு கட்சிகள் களம் இறங்கி இருந்தாலும் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர்களின் கட்சிகளான இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ், பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

இந்த நிலையில், நேற்று இரவுவரை பாகிஸ்தான் தேர்தலில் 253 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானில் மொத்தம் 336 நாடாளுமன்ற தொகுதிகளில் 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டது போக, மீதமுள்ள 266 தொகுதிகளுக்கும் நேரடியாக மக்கள்மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இம்ரான் கானின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி

இந்த 266 தொகுதிகளில் 1 தொகுதியில் வேட்பாளர் இறந்ததையடுத்து, மற்ற 265 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் தனிப் பெரும்பான்மைக்கு 133 இடங்கள் தேவை. ஆனால், நேற்று இரவுவரையிலான நிலவரப்படி இம்ரான் கானின் ஆதரவு வேட்பாளர்கள் 100 இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர். நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 71 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதையடுத்து ஒருபக்கம், இம்ரான் கானும் மறுபக்கம் நவாஸ் ஷெரீபும் தங்கள் கட்சிகள் வெற்றி பெற்றதாகக் கூறி பிற கட்சிகளுக்கு கூட்டணி அழைப்பை விடுத்துள்ளனர். அதிலும் குறிப்பாக நவாஸ் ஷெரீபின் கட்சியின் பிலாவல் பூட்டோவின் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு ஒப்புக் கொண்டிருப்பதாகவே கூறப்படுகிறது.

வெற்றி குறித்து இம்ரான் கான்  கருத்து 

இந்த நிலையில், அடியாலா சிறையில் இருக்கும் இம்ரான் கான், “நவாஸ் ஷெரீப்பின் ’லண்டன் திட்டம்’ பலிக்கவில்லை. பாகிஸ்தானியர்கள் எவரும் அவரை நம்பவில்லை. இப்போது மக்கள் அனைவரும் தங்கள் வாக்கின் வலிமையை உணர்ந்திருப்பார்கள். அதை உணர்ந்த கையோடு தங்கள் வாக்குகளைப் பாதுகாக்கவும் அவர்கள் முயல வேண்டும். மக்களாகிய நீங்கள் எனது நம்பிக்கையை மெய்ப்பித்துவிட்டீர்கள். பிடிஐ கட்சி அழகான வெற்றியைப் பெற்றுள்ளது. அதற்கு உதவிய மக்களுக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான்

இந்த தேர்தலுக்கு முன்னதாக இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி, உதவியாளர் முகமது குரேஷி ஆகியோர் தேர்தலில் போட்டியிடாத வகையில் சில வழக்குகளில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த தேர்தலில், அவருடைய கட்சிக்குப் போட்டியிட தடை விதிக்கப்பட்டிருந்ததால், அவருடைய ஆதரவாளர்கள் பலரும் சுயேச்சையாக போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாகவே, ராணுவத்தின் ஆதரவோடு நவாஸ் ஷெரீப் தேர்தலை எதிர்கொண்டதாகவும், பல இடங்களில் முறைகேடான முறையில் அக்கட்சி வெற்றிபெற்றதாகவும் பிடிஐ குற்றம்சாட்டியுள்ளது. அதற்குக் காரணம், தேர்தலில், இம்ரான் கானின் பிடிஐ கட்சியின் ஆதரவுபெற்ற சுயேட்சை வேட்பாளர்கள், எதிர்பார்க்காத அளவுக்கு அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர். ஆனால் ராணுவத்தின் ஆதரவால் நவாஸ் ஷெரீப் தனிப்பெரும்பான்மை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேநேரம் தொழில்நுட்பரீதியாக அக்கட்சி 71 இடங்களையே வென்றதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: 50 ஆண்டுகளில் காணாமல்போன உலகின் 4வது பெரிய கடல்.. ஆய்வில் வெளியான தகவல்.. என்ன காரணம்?

படிவம் 45இன்படி, குற்றச்சாட்டு வைத்த இம்ரான் கான்

முன்னதாக, ‘இத்தேர்தலில் மோசடி தொடங்குவதற்கு முன்பு, நாம் 150 இடங்களை வென்றிருந்தோம். படிவம் 45இன் தரவுகள்படி, (படிவம் 45 என்பது பாகிஸ்தானின் தேர்தல் ஆணையத்தின் வாக்கு எண்ணிக்கை அடிப்படையிலான அறிக்கை என அறியப்படுகிறது) நாம் 170 தொகுதிகளை வென்றுள்ளோம்’ என இம்ரான் கான் தெரிவித்திருந்தார். குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக, தனது வேட்பாளர்கள் 150க்கும் மேற்பட்ட இடங்களில் பெரும்பான்மை பெற்றதற்கு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விவரங்கள் அடங்கிய படிவம் 45 தங்களிடம் உள்ளதாகத் தெரிவித்துள்ளளார் அவர்.

பாகிஸ்தான் தேர்தல்: உலக நாடுகள் சொல்வது என்ன?

இந்த நிலையில், பாகிஸ்தானின் தேர்தல் முடிவுகள் குறித்து பிற நாடுகளும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. தேர்தலில் தங்கள் தலையீடு இருப்பதாக கூறப்படுவது குறித்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கவலைதெரிவித்துள்ளன. இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் கேமரூன், ’அனைத்துக் கட்சிகளும் முறையாகத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. தேர்தல் நேர்மையான முறையில் நடைபெறவில்லை’ எனக் தனது கவலையைத் தெரிவித்துள்ளார்.

அதுபோல் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், ‘பாகிஸ்தான் தேர்தலின்போது கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது’ என விமர்சித்துள்ளார்.

இதையும் படிக்க: விமானத்தில் ரத்த வாந்தி எடுத்து இறந்த நபர்.. அச்சத்தில் அலறிய பிற பயணிகள்.. நடந்தது என்ன?

கேள்வி எழுப்பும் அமெரிக்கா!

அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் எம்பிக்களான ரோ கண்ணா, இல்தான் உமர் ஆகியோர், "இந்தத் தேர்தலில் ராணுவத்தின் தலையீடு இருந்தது. தேர்தல் முடிவுகளில் மோசடிகள் நிகழ்ந்துள்ளன” எனத் தெரிவித்திருப்பதுடன், ’முறைகேடுகள்மூலம் வெற்றிபெற்றதாகக் கூறப்படும் புகார்கள்மீது விசாரணை நடத்தப்படாதவரை வெற்றிபெற்றவர்களை அமெரிக்க வெளியுறவுத் துறை அங்கீகரிக்கக் கூடாது" எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், தேர்தலின்போது ஊடகத்தினர்மீது தாக்குதல் நடத்தப்பட்டது, இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது ஆகியவற்றை மேற்கோள் காட்டி, தேர்தல் நியாயமாக நடைபெற்றுள்ளதா என்பது பற்றியும் அமெரிக்கா கேள்விகளை எழுப்பியுள்ளது. அதேபோல், ஐரோப்பிய ஒன்றியம், "இந்த தேர்தலில் சமநிலை போதுமான அளவில் இல்லை. முக்கியப் பிரமுகர்கள் சிலர் போட்டியிட முடியாத நிலை இருந்தது. மேலும், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், பேச்சு சுதந்திரம், இணையச் சேவை ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகள் இருந்துள்ளன" என விமர்சித்துள்ளது.

இதையும் படிக்க: அமெரிக்காவில் மேலும் 1 இந்தியர் கொலை.. 40 நாட்களில் 4 மரணங்கள்.. தொடரும் சோகம்!