உலகம்

"பாகிஸ்தான் எங்கள் 2வது வீடு; இந்தியாவுடன் நல்லுறவு" - தலிபான் செய்தித்தொடர்பாளர்

JustinDurai
பாகிஸ்தான் - இந்தியா இடையேயான நீண்டகால பிரச்சினைகளை தீர்க்க இருநாடுகளும் முன்வர வேண்டும் என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் கடந்த மே மாத இறுதியில் இருந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கின. அதனைத் தொடர்ந்து கடந்த 15-ம் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலிபான்கள் வசம் சென்றது. இதையடுத்து ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளை தலிபான்கள் மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் இறங்கின.
இச்சூழலில், அண்டை நாடுகளுடன் தலிபான்களின் உறவு எப்படி இருக்கும் என்பது குறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் தெளிவுபடுத்தியுள்ளார். அவர் கூறுகையில், ''பாகிஸ்தான் எங்களுக்கு இரண்டாவது வீடு போன்றது. எல்லைப்புற நாடு என்பதாலும் மதத்தின் அடிப்படையிலும் இரு நாட்டு மக்களும் ஒன்றாகக் கலந்தவர்கள். பாகிஸ்தானுடன் வணிகம் மற்றும் அரசியல் தொடர்புகளை மேலும் வலுப்படுத்த எதிர்நோக்கியிருக்கிறோம். பாகிஸ்தான் - இந்தியா இடையேயான நீண்டகால பிரச்சினைகளை தீர்க்க இரு நாடுகளும் முன்வர வேண்டும். இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை ஏற்படுத்த விரும்புகிறோம்.
ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் கைப்பற்றியதில் பாகிஸ்தானுக்கு எந்தப் பங்கும் இல்லை. தலிபான்கள் விவகாரத்தில் அண்டை நாடு எப்போதும் தலையிட்டதில்லை. இஸ்லாமை அடிப்படையாகக் கொண்ட, அனைத்து ஆப்கானியர்களையும் உள்ளடக்கிய வலிமையான அரசை அமைக்க விரும்புகிறோம்'' என்று கூறினார்.