உலகம்

பாகிஸ்தான் மசூதி குண்டுவெடிப்பில் 50 பேர் பலி - காரணம் வெளியிட்டு தலிபான்கள் பொறுப்பேற்பு!

பாகிஸ்தான் மசூதி குண்டுவெடிப்பில் 50 பேர் பலி - காரணம் வெளியிட்டு தலிபான்கள் பொறுப்பேற்பு!

சங்கீதா

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் தொழுகை நடந்துகொண்டிருந்தபோது இன்று நடந்த தலிபான் தற்கொலைப்படை தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 100 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் வடக்கு நகரமான பெஷாவர் நகரில், காவல்நிலையத்துக்கு அருகே உள்ள மசூதி ஒன்றில் இன்று பிற்பகல் தொழுகை நடந்துக்கொண்டிருந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது பிற்பகல் 1.40 மணியளவில் மசூதியில் திடீரென வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில், மசூதியின் ஒருபக்கம் இடிந்து விழுந்தது. இந்த குண்டுவெடிப்பு மற்றும் இடிபாடுகளில் சிக்கி 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 100 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மசூதிக்குள் முன்வரிசையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த ஒருவர், தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. உயர்மட்ட பாதுகாப்புடன் இருந்தப் பகுதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததில் ஏராளமான போலீசாரும் காயமடைந்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆஃப்கானிஸ்தானில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP)-னின் தளபதி உமர் காலித் குராசானி கொல்லப்பட்டார். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையின் பொருட்டு, இந்த தற்கொலைப் படை தாக்குதலை நடத்தியதாக மறைந்த உமர் காலித் குராசானியின் சகோதரர் கூறியுள்ளார். பாகிஸ்தான் தலிபான் என்று அழைக்கப்படும் சட்டவிரோத TTP, பாதுகாப்புப் பணியாளர்களைக் குறிவைத்து கடந்த காலங்களில் பல தற்கொலைத் தாக்குதல்களை நடத்தி உள்ளது.

மசூதிக்கு அருகாமையில் உள்ள பெஷாவர் காவல்துறை கண்காணிப்பாளரான (விசாரணை), ஷாசாத் கௌகாப், தொழுகை நடத்துவதற்காக மசூதிக்குள் நுழைந்தபோது குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும், இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பியதாகவும் ஊடகங்களில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். ஒட்டுமொத்த தேசமும் பயங்கரவாதத்துக்கு எதிராக நிற்பதாகவும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானில் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் மக்கள் தவித்து வரும் நிலையில், இந்த குண்டுவெடிப்பு மக்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.