உலகம்

இன்சுலின் கூட இல்லை! பாகிஸ்தானில் தீர்ந்துபோன மருந்துகள்; நோய் முற்றி மரணிக்கும் நோயாளிகள்

இன்சுலின் கூட இல்லை! பாகிஸ்தானில் தீர்ந்துபோன மருந்துகள்; நோய் முற்றி மரணிக்கும் நோயாளிகள்

JustinDurai

மருந்துப் பொருட்கள் வாங்குவதற்குக் கூட பாகிஸ்தான் அரசிடம் நிதி இல்லாததால், அந்நாட்டு மக்கள் போதிய சிகிச்சை பெற முடியாமல் பரிதவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் வரலாறு காணாத நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளது. அத்தியாவசிய பொருள்களின் விலையுயர்வு ஒரு பிரச்னை எனில், பொருள்கள் கிடைப்பதில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாகவும் தெரிகிறது.

குறிப்பாக பாகிஸ்தானில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கையிருப்பில் இருந்த மருந்துப் பொருட்கள் தீர்ந்து விட்டன. பாகிஸ்தானை பொறுத்தவரை 95 சதவீத மருந்துகளை அந்நாடு வெளிநாடுகளில் இருந்துதான் வாங்கி வருகிறது. தற்போது பாகிஸ்தான் அரசிடம் வெளிநாட்டு செலாவணி இல்லாததால் மருந்துகளை இறக்குமதி செய்ய முடியவில்லை.

குறிப்பாக, காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் பாராசிட்டமல், சர்க்கரை நோயாளிகளுக்கான இன்சுலின், வலி நிவாரணியாக பயன்படும் ப்ரூஃபென் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகள் கூட மருத்துவமனைகளில் இல்லை. இதனால் சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கூட, மருந்து இல்லாமல் நோய் முற்றி மரணித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், அறுவை சிகிச்சைக்கு தேவையான மருந்து, மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் அறுவை சிகிச்சை செய்வது தள்ளிப்போடப்பட்டு வருகின்றன. இதனால் பாகிஸ்தானில் தினந்தோறும் நோயாளிகள் கொத்துக் கொத்தாக பாகிஸ்தானில் இறந்து வருகின்றனர்.

கடும் பொருளாதார நெருக்கடியால் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை நிறுத்தி வைக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.