உலகம்

ஹபீஸ் சயித் அமைப்புக்கு இன்னும் தடை விதிக்காத பாகிஸ்தான்!

ஹபீஸ் சயித் அமைப்புக்கு இன்னும் தடை விதிக்காத பாகிஸ்தான்!

webteam

இந்தியா மற்றும் சர்வதேச‌‌ நாடுகளின் அழுத்தத்துக்குப் பணிந்து, இரண்டு‌ பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளதாக கூறியது பொய் எனத் தெரிய வந்துள்ளது.

புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூரத் தாக்கு தலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும், ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு நடத்தியது. இந்தச் சம்பவத்துக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானுக்கும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தன.

இந்நிலையில் இந்தியா மற்றும் சர்வதேச‌‌ நாடுகளின் அழுத்தத்துக்குப் பணிந்து, மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயித்தின், லஷ்கர் இ தொய்பாவின் கிளை‌ அமைப்புகளான ஜமாத் உத்தவா, ஃபலா இ இன்சானியத் ஆகியவற்றுக்குத் தடை விதித் துள்ளதாகப் பாகிஸ்தான் அறிவித்தது. கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.

ஆனால், சொன்னது போல இந்த அமைப்புகளுக்குப் பாகிஸ்தான் தடை விதிக்கவில்லை. அந்நாட்டின், தேசிய பயங்கரவாத எதிர்ப்பு ஆணையம், தங்களது இணையத்தைத் திங்களன்று புதுப்பித்துள்ளது. அதில் இந்த அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டதாகக் குறிப்பிடவில்லை. அதே நேரம் இந்த அமைப்புகள், கண்காணிப்பில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 

‘’2017- ஆம் ஆண்டு இருந்த நிலையில் இருந்து இவ்வமைப்புகளுக்கு எதிராக எந்த மாற்றமும் இல்லை என்று அந்த ஆணையம் தெரிவித்துள் ளது. இதில் இருந்தே பாகிஸ்தான் அந்த அமைப்புகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. உலக நாடுகளை ஏமாற்ற பாகிஸ்தான் பொய்யானத் தகவலை வெளியிட்டுள் ளது’’ என்று இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித் துள்ளார்.