உலகம்

பாகிஸ்தான் வெள்ளம்: நீர்த்தொற்றுகளால் அபாயம்; முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி?

பாகிஸ்தான் வெள்ளம்: நீர்த்தொற்றுகளால் அபாயம்; முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி?

Sinekadhara

பாகிஸ்தானில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் அங்கு மிகப்பெரிய பேரழவு ஏற்பட்டுள்ளது. அங்கு கிட்டத்தட்ட 4,000 புதிய வைரஸ் நோய்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வயிற்றுப்போக்கு, சரும பிரச்னைகள் மற்றும் மலேரியா போன்ற மோசமான வைரஸ் தொற்றுக்கள் கடந்த 24 மணிநேரத்தில் பாலோசிஸ்தான் மாகாணத்தில் அதிகளவில் பதிவாகியுள்ளது. ஒரேநாளில் 1043 பேருக்கு சரும தொற்றுகள் ஏற்பட்டுள்ளதாகவும், 675 பேருக்கு மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதுதவிர, கண் மற்றும் நுரையீரல் தொற்றுகள், காலரா மற்றும் நீர்மூலம் பரவும் தொற்றுகளும் பதிவாகியுள்ளன. மேலும், தினந்தோறும் ரத்தப் பரிசோதனைகள் எடுக்கப்படுவதில் 60-70 சதவீதம் ரத்த மாதிரிகளில் மலேரியா தொற்று உறுதியாகி வருகிறது என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பாக்டீரியாவால் மாசுபட்ட தண்ணீரைக் குடிப்பதால் சிந்த் மாகாணத்தில் மட்டும் தினசரி 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் காலராவால் உயிரிழப்பதாக சி.என்.என் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மூன்றில் ஒரு பகுதியை மூழ்கடித்த வெயில்கால பெருவெள்ளத்தால் தண்ணீரால் பரவும் தொற்றுக்கள் வெகு வேகமாக பரவிவருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பருவகால மழை மற்றும் பாகிஸ்தானின் வட மலைப்பகுதி பனிப்பாறைகள் உருகியதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கிட்டத்தட்ட 1,600 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள். மேலும் 33 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்கள் இருப்பிடங்களைவிட்டு குடிபெயர்ந்துள்ளனர். தற்போது வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்திருக்கிறது. இதனிடையே ஆயிரக்கணக்கானோர் வயிற்றுப்போக்கு, டெங்கு காய்ச்சல் மற்றும் மலேரியா போன்ற நீரால் பரவும் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நீர்மூலம் பரவும் தொற்றுக்களிடமிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

  • பருவமழை குறையத் தொடங்கியிருந்தாலும், பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்துவருகிறது. தேங்கி நிற்கும் தண்னீரால் பல்வேறு நோய்த்தொற்றுகள் பரவுகிறது. இதனால் டைபாய்டு, இரைப்பை குடல் அழற்சி, ஃபுட் பாய்சன் மற்றும் பிற உயிருக்கு தீங்கு விளைவிக்கும் நோய்த்தொற்றுகள் பரவிவருகின்றன
  • சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொற்றுகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்க உதவும்
  • மழைத்தண்ணீரில் இறங்கி நடக்கவேண்டாம். குறிப்பாக நீண்ட நாட்களுக்கு தேங்கியிருக்கும் தண்ணீரில் கால் வைக்கவேண்டாம்
  • முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணியப்பழகுங்கள்
  • தனிமனித சுகாதாரத்தை கடைபிடிப்பது அவசியம். அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாக வைத்திருக்கவும்
  • தேங்கியிருக்கும் தண்ணீர் கொசுக்களின் பிறப்பிடம். எனவே வீட்டைச்சுற்றி தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காத வண்ணம் குழிகள் இருந்தால் அதை மூடவும்
  • வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்க்கவும். குறிப்பாக வெளிப்புறத்தில் வைத்து சமைக்கப்படும் உணவுகளை சாப்பிடவேண்டாம்
  • உணவுகளை எப்போதும் மூடிவைத்திருக்கவும். காய்கறிகள் மற்றும் பழங்களை சுத்தமாக கழுவி பயன்படுத்தவும்
  • வயிற்று பிரச்னைகளை தவிர்க்க சுத்தமான தண்ணீரை மட்டும் குடிக்கவும். எப்போதும் தண்ணீரை கொதிக்கவைத்து வடிகட்டிய பின்னரே குடிக்கவும்