imf, pakistan x page
உலகம்

கடனுக்காக IMF போட்ட கண்டிஷன்.. அதிரடியில் இறங்கிய பாகிஸ்தான்.. 1,50,000 அரசு ஊழியர்களை நீக்க முடிவு!

Prakash J

அண்டைநாடான பாகிஸ்தான் கடந்த சில மாதங்களாகவே பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவருகிறது. இதன் காரணமாக, வரலாறு காணாத அளவுக்கு அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் அரசு, தனது நிர்வாகச் செலவுகளைக் குறைக்கும் முயற்சியில், 1,50,000 அரசுப் பணியிடங்களை நடைமுறையில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவர பாகிஸ்தான் அரசு முயற்சி செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 7 பில்லியன் டாலர் தொகையை கடனாக பெற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கடனுடன், சர்வதேச நாணய நிதியம் பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தது. குறிப்பாக, இந்த கடனைச் சிறப்பாகப் பயன்படுத்த IMF பாகிஸ்தான் அரசின் செலவுகளைக் குறைப்பதற்கும், வரி-ஜிடிபி விகிதத்தை அதிகரிப்பதற்கும், விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முதலீடுகள் மீது வரிவிதிக்கவும், அரசின் மானியங்களைக் குறைக்கவும், சில அரசு நிதி பொறுப்புகளை மாநில அரசுக்கு மாற்றுவதற்கும் நிபந்தனை விதித்தது.

இதையும் படிக்க: ”45 நாட்கள் தூங்கல”.. நிறுவனம் கொடுத்த டார்ச்சர்.. பணி சுமையால் ஊழியர் எடுத்த விபரீத முடிவு!

இதை நடைமுறைப்படுத்துவதாக பாகிஸ்தான் அரசு உறுதியளித்தபிறகே, IMF, முதற்கட்டமாக 1 பில்லியன் டாலர் தொகையைக் கொடுத்துள்ளது. இதையடுத்தே, பாகிஸ்தான் அரசு மிகவும் முக்கியமான முடிவை அறிவித்துள்ளது. அந்த வகையில்தான், 7 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுக்காக IMF உடன் ஒப்புக்கொண்ட சீர்திருத்தங்களின் ஒருபகுதியாக, சுமார் 1,50,000 அரசுப் பணியிடங்களை நடைமுறையில் இருந்து நீக்கவும், 6 அமைச்சகங்களை மொத்தமாக மூடவும், இரண்டு அமைச்சகங்களை ஒன்றாக இணைக்கவும் முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் நிதி அமைச்சர் முஹம்மது ஒளரஙகசிப், ”IMF உடன் இறுதிப் பேச்சுவார்த்தை முடிந்து கடனுக்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானுக்கான கடைசிக் கடன் திட்டமாக இருக்கும், இனி பாகிஸ்தான் கடன் வாங்காது. அதேநேரத்தில், அமைச்சகங்களை மறுசீரமைப்பு செய்யும் திட்டத்தின் ஒருபடியாக, ஆறு அமைச்சகங்களை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இரண்டு அமைச்சகங்கள் ஒன்றாக இணைக்கப்படும். இதோடு பல அமைச்சகங்களில் உள்ள சுமார் 1,50,000 அரசுப் பணிகள் நீக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ’அனுபம்கேர்’ படத்துடன் ரூ.500 கள்ளநோட்டுகள்! வியாபாரியை ஏமாற்றி 2,100 தங்கம் எடுத்துச்சென்ற சம்பவம்!