நியூயார்க்கில் சனிக்கிழமை நடைபெறவிருந்த தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்க (சார்க்) நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சார்க் மாநாட்டில் தலிபான்கள் ஆப்கானிஸ்தான் பிரதிநிதியாக கலந்துகொள்ள பாகிஸ்தான் விரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியா மற்றும் சில உறுப்பினர்கள் இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், இதுபற்றிய ஒருமித்த கருத்து இல்லாததாலும் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
தாலிபான்களின் புதிய ஆட்சி இன்னும் உலகத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. தலிபான்களின் உயர் அமைச்சர்கள் பல ஐ.நா.வால் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அமீர்கான் முத்தாகி ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சராக உள்ளார். அவர் எந்த ஐ.நா சபை கூட்டங்களிலும் கலந்து கொள்ள வாய்ப்பில்லை.
கடந்த வாரம் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “தலிபான்கள் ஆட்சி என்பது அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கம் அல்ல. ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சியை அங்கீகரிப்பதற்கு முன்பு உலகம் சிந்திக்க வேண்டும். காபூல் அரசாங்கத்தில் பெண்கள், சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் இல்லை” என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
SAARC என்பது தெற்காசியாவின் எட்டு நாடுகளுக்கிடையேயான அமைப்பாகும். இதில் வங்கதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.