உலகம்

பாக். இடைக்கால பிரதமர் மீது ரூ.22,000 கோடி ஊழல் குற்றச்சாட்டு

பாக். இடைக்கால பிரதமர் மீது ரூ.22,000 கோடி ஊழல் குற்றச்சாட்டு

webteam

பாகிஸ்தான் இடைக்காலப் பிரதமராக ஆளும் முஸ்லீம் லீக் கட்சியால் முன்னிறுத்தப்பட்டுள்ள ஷாகித் அப்பாஸி மீது ரூ.22,000 கோடி ஊழல் புகார் எழுந்துள்ளது. 

நவாஸ் ஷெரீஃப் தலைமையிலான அமைச்சரவையில் பெட்ரோலியத் துறை அமைச்சராகப் பதவி வகித்த அப்பாஸி மீது, சட்டவிரோதமாக இயற்கை எரிவாயு ஒப்பந்தங்களை வழங்கியதாக அந்நாட்டின் தணிக்கை துறை புகார் கூறியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் ரூ.22,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றதாக கடந்த 2015ல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தானைச் சேர்ந்த டான் (DAWN) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக அப்பாஸியின் பெயர் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் பெட்ரோலியத் துறை செயலாளர் அபித் சயீத், பொதுத்துறை நிறுவனமான ஐஎஸ்ஜிஎஸ் (ISGS) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மொபின் சௌலூத், தனியார் நிறுவனமான எங்க்ரோவின் (Engro) தலைமை செயலதிகாரி இம்ரான் உல் ஹக் ஆகியோரும் இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 

ஊழல் குற்றச்சாட்டால் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.  இதையடுத்து நவாஸின் இளைய சகோதரர் ஷாபாஸ் ஷெரீஃப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அவர் எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்படும் வரை 45 நட்களுக்கு இடைக்கால பிரதமராக அப்பாஸி அந்நாட்டு நாடாளுமன்றத்தால் நாளை தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது.