“உக்ரைன் போரால் தமிழகம் திரும்பிய மாணவர்கள் மீண்டும் அங்கு படிப்பை தொடர செல்லவில்லை” என வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழக மாணவர்கள் உக்ரைன் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் உக்ரைன் போர் தொடங்கியுள்ள நிலையில், வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை சார்பில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா்கள் உக்ரைனுக்கும், உக்ரைனின் பிற பகுதிகளுக்கும் அவசியமில்லாமல் பயணம் மேற்கொள்வதைத் தவிா்க்குமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யா - கிரீமியா இணைப்பு பாலத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடா்ந்து, உக்ரைன்தான் இச்சம்பவத்துக்கு காரணம் என ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. இதனை பயங்கரவாதச் செயல் என ரஷ்யா கூறியுள்ளது.
இதையடுத்து, உக்ரைனின் தலைநகரமான கீவ் உள்பட பல முக்கிய நகரங்கள் மீதான ஏவுகணைத் தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தலில், ‘தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளதால், இந்தியா்கள் உக்ரைனுக்கும், அந்நாட்டில் உள்ள நகரங்களுக்கு இடையிலும் அவசியமற்ற பயணங்கள் மேற்கொள்வதைத் தவிா்க்கவும்.
உக்ரைன் அரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கட்டாயம் பின்பற்றவும். உக்ரைனில் உள்ள இந்தியா்களை நாங்கள் (இந்திய தூதரகம்) அணுகும் வகையில், தங்களின் இருப்பை தூதரகத்துக்கு தெரியப்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.