உலகம்

2050க்குள் இவையெல்லாம் நடக்கும்.. இயற்கை பேரழிவு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

2050க்குள் இவையெல்லாம் நடக்கும்.. இயற்கை பேரழிவு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

JustinDurai

இயற்கை பேரழிவுகள் காரணமாக 2050-ஆம் ஆண்டிற்குள் நான்கரை கோடி மக்கள் இடம்பெயரும் ஆபத்து உருவாகும் என்று புதிய ஆய்வறிக்கை கூறுகிறது.

உலகில் அனைத்து நாடுகளும் தற்போது எதிர் நோக்கியுள்ள மிகப்பெரிய பிரச்சனை காலநிலை மாற்றம். இந்நிலையில் இந்தியா, வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய ஐந்து தெற்காசிய நாடுகளில் இயற்கை பேரழிவுகள் காரணமாக பாதிக்கப்படும் மக்கள், இடம்பெயர்வு செய்வது குறித்து புதிய ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது சர்வதேச நிறுவனங்களான ஆக்சன் ஏட் இன்டர்நேஷனல் மற்றும் க்ளைமேட் ஆக்சன் நெட்வொர்க் சவுத் ஆசியா நடத்திய ஆய்வின் அடிப்படையில் அமைந்துள்ளது.

இந்த ஆய்வறிக்கையில், தெற்காசியாவில் மட்டும் 2050-ஆம் ஆண்டு வாக்கில் 6 கோடிக்கு மேற்பட்ட மக்கள் வீடற்றவர்களாகவும் இடம்பெயர்ந்துள்ளவர்களாகவும் இருக்கக்கூடும் என்று இயற்கை பேரழிவு சாத்தியத்தை கணித்துள்ளது.

மேலும் தெற்காசியாவில் காலநிலை இடம்பெயர்வு மும்மடங்காக இருக்கும் என்றும் வெள்ளம், வறட்சி, புயல் உள்ளிட்ட காலநிலை பேரழிவுகளால் மக்கள் மோசமாக பாதிப்புக்குள்ளாவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியாவில் 2050-ம் ஆண்டில் 4.5 கோடி மக்கள் இடம்பெயர்வு செய்யும் கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில், இந்தியாவில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 1.4 கோடி என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்தில் உள்ளபடி புவி வெப்ப அதிகரிப்பை 2 டிகிரி  செல்சியஸ் அளவைவிட குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவில் அரசியல் ரீதியான தோல்வி ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.