உலகம்

ஆப்பிரிக்கக் காடுகளில் மர்மமான முறையில் இறந்த 350 யானைகள்? - என்ன காரணம்?

jagadeesh

ஆப்பிரிக்கக் காடுகளில் மர்மமான முறையில் 350-க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆப்பிரிக்கக் கண்டத்தின் போட்ஸ்வானா நாட்டில் கடந்த சில மாதங்களாக மர்மமான முறையில் யானைகள் உயிரிழக்கத் தொடங்கி இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 350 யானைகளுக்கும் மேல் உயிரிழந்து இருக்கிறது. யானைகளின் இந்தத் திடீர் உயிரிழப்பு மே மாதத்தில் தொடங்கியதாக பிபிசி செய்தி வெளியிட்டு இருக்கிறது.

அதுவும் போட்ஸ்வானா நாட்டின் ஒகாவாங்கோ டெல்டா பகுதிகளில் யானைகள் உயிரிழப்பு அதிகம் இருக்கிறது. இது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுவதாகவும் யானைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து பிரிட்டனிலிருந்து இயக்கும் நேஷனல் பார்க் ரெஸ்க்யூ எனும் வன உயிரின பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த டாக்டர் மெக்கான் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

அதில் " போட்ஸ்வானா காடுகளில் ஒரு மணிநேரம் விமானத்தில் பறந்து பார்த்தபோது 169 யானைகளின் இறந்த உடல்களைக் கண்டோம். இவ்வளவு குறுகிய நேரத்தில் இத்தனை உடல்களைப் பார்ப்பது என்பது மிகவும் அதிகமானது. அதன் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வுகளில் மொத்தமாக 350க்கும் அதிகமான யானைகள் உயிரிழந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. வறட்சியுடன் தொடர்பில்லாமல் ஒரே சமயத்தில் இத்தனை யானைகள் உயிரிழப்பது என்பது இதற்கு முன்பு கண்டிராதது," என்றார்.

மேலும் தொடர்ந்த அவர் " இந்த யானைகளின் உயிரிழப்புக்கு வேட்டையாடப்பட்டதுதான் காரணம் என்று அவற்றின் உடல்களில் தந்தம் இல்லாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி போட்ஸ்வானா அரசு தெரிவித்துள்ளது. விலங்குகளை வேட்டையாடுபவர்கள் பயன்படுத்தும் சயனைடை உண்டிருந்தால் யானைகள் மட்டுமல்லாது பிற உயிர்களும் இறந்திருக்கும். ஆனால் இப்போது யானைகள் மட்டுமே உயிரிழந்திருக்கின்றன. கடந்த ஆண்டு இயற்கையாகப் பரவிய ஆந்த்ராக்ஸ் கிருமியால் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தன. ஆனால் இப்போது அதற்கும் அதிகமான வாய்ப்பு இருக்காது .ஆனால் நச்சு மூலமாகவோ நோய் தாக்குதலாலோ இந்த யானைகள் உயிர் இழந்திருக்கக் கூடும் என்பதையும் முழுதாக மறுக்க முடியாத சூழல் நிலவுகிறது" என்கிறார் மெக்கான்.