காசா முகநூல்
உலகம்

காஸாவில் சுமார் 130 குறைமாத குழந்தைகள் உயிருக்கு ஆபத்து!

PT WEB

காஸா பகுதிக்கு எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை இஸ்ரேல் நிறுத்திவிட்டது. இதனால், மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் கிடைப்பதில் காஸாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

“காஸாவின் முக்கிய மருத்துவமனையான அல் அக்சா மருத்துவமனையிலும் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது. இதனால், கண்ணாடி இன்குபேட்டருக்குள் உள்ள குறைமாத குழந்தைகள் உரிய சிகிச்சையின்றி இறக்கும்நிலை ஏற்பட்டுள்ளது” என அந்த மருத்துவமனையின் இயக்குநர் ஐயத் அபு ஜகார் தெரிவித்துள்ளார்.

காஸாவில் மட்டும் இதுபோன்று 130 குறைமாத குழந்தைகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. காஸாவில் உள்ள 50,000 கர்ப்பிணிகளும் உரிய சிகிச்சை பெற இயலாத அவல நிலையில் உள்ளனர்.

இஸ்ரேல் நடத்திவரும் இடைவிடாத தாக்குதலின் விளைவாக 7 மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. மற்ற மருத்துவமனைகளும் படிப்படியாக மூடப்படும் நிலையில் உள்ளன. இதற்கிடையே, எகிப்திலிருந்து ரஃபா எல்லை வழியாக மேலும் 14 லாரிகளில் நிவாரண பொருட்கள் காஸாவிற்குள் சென்று சேர்ந்தன.

கடந்த சனிக்கிழமை 20 லாரிகளில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது மேலும் 14 லாரிகளில் குடிநீர், உணவு, மருந்துகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.