கார் திருடன் PT
உலகம்

கனடா | ‘திருடன் கையில சாவியை கொடுத்த கதை..’ - கார் திருட்டை தடுக்க காவல்துறை கொடுத்த அதிர்ச்சி ஐடியா

கார் திருட்டை தடுக்க டொராண்டோ காவல்துறையின் வினோதமான கோரிக்கை சமூக ஊடகங்களில் சீற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Jayashree A

கனடா நாட்டில் டொராண்டோ நகரில் கார் திருடு போகாமல் இருப்பதற்கு கார் சாவியை காரினுள்ளோ அல்லது வீட்டின் முகப்பிலோ சாவியை தொங்கவிடுங்கள் என்று காவல்துறை கூறியிருப்பது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருட்டில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள மக்கள் காவல் நிலையத்தை அணுகுவார்கள். ஆனால் டொராண்டோ நகரில் நடப்பதோ தலைகீழ்... அந்நாட்டு போலீசார், திருடன் கையில் சாவியை கொடுத்த கதை போல... திருடர்களுக்கு உதவுவதைப்போன்று ஒரு அறிக்கையை விட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கனடா நாட்டில் டொராண்டோ நகரின் புள்ளிவிவரத்தின் படி, கடந்த ஆண்டுகளைவிட 2023ம் ஆண்டில் கிரேட்டர் டொராண்டோ ஏரியா முழுவதும் கார் திருட்டுகள் 25 சதவீதம் அதிகரித்துள்ளன. அதிலும் காரை மட்டும் திருடவந்த திருடர்கள் போனஸாக வீடுகளில் புகுந்து பொருட்களை திருடிச் செல்வது, கடந்த ஆண்டுகளை விட 400 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

இதற்கு காவல்துறையினர் கூறும் வினோதமான காரணம் என்னவென்றால், ‘காரை திருடவரும் திருடர்கள் கார் சாவியை தேடுவதற்காக உரிமையாளர்களின் வீட்டிற்குள் நுழைகின்ற போது வீட்டின் பொருள்களையும் சேர்த்து திருடி செல்கின்றனர்’ என்பது. இதனால், உரிமையாளர்கள் காரை பறிகொடுப்பதுடன் கூடுதலாக வீட்டிலுள்ள பொருட்களையும் பறிகொடுக்கின்றனர்.

மேலும் “திருடர்கள் கையில் இருப்பது பொம்மை துப்பாக்கி இல்லை, உண்மையான துப்பாக்கி. ஆகவே... கார் சாவியை காரிலோ அல்லது வீட்டின் முகப்பிலோ உரிமையாளர்கள் வைத்து விட்டால், கார் திருடவருபவர்கள் வீட்டினுள் நுழைந்து திருடுவது தடுக்கப்படும்” என்று அறிக்கை விடுத்துள்ளனர் காவல்துறையினர்.

போலிசாரின் இந்த வினோத அறிக்கை பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், சமூக ஊடக தளங்களில் சீற்றத்தை தூண்டியுள்ளது. சமூகவளைதளங்களில், சிலர் ”இந்த அறிக்கை பைத்தியகாரத்தனமானது, இது கார் திருட்டை மேலும் அதிகரிக்கும்” என்று கூறிவருகின்றனர்.