நேற்று ஜெனிவாவில் நடந்த உலக சுகாதார நிறுவன மாநாட்டில் பேசிய அதன் இயக்குநர் டெட்ராஸ் அதேனாம், ‘ஏழை நாடுகளுக்கு இன்னும் தடுப்பூசி சென்றடையவில்லை’ எனக்கூறி, இது உலகளாவிய சமூகத்துக்கான தோல்வியென்று வேதனை தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பேசியிருக்கும் அவர், “பணக்கார நாடுகள் யாவும், தடுப்பூசி செலுத்தி தங்கள் நாட்டின் இளையவர்களையும் கொரோனாவுக்கு எதிராக மாற்றி வரும் இந்த நேரத்தில், ஏழை நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறையால் அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு கூட தடுப்பூசி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஏழை நாடுகளில் இருக்கும் மக்கள், கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்” என அவர் கூறியுள்ளார்.
ஆப்பிரிக்காவில், கடந்த வாரத்தை விடவும் இப்போது புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கையும், இறப்பும் சுமார் 40% அதிகரித்திருப்பதாகவும், அதற்கு உலகம் முழுக்க பரவி கிடக்கும் டெல்டா வகை கொரோனாவே காரணமென்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தடுப்பூசி விநியோகத்தில், இந்தளவுக்கு பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிலவுவது, “உலக சமூகமே தோற்றதற்கு சமம். உலகளாவிய சமூகத்தின் தோல்வி இது” என அவர் கடுமையாக கூறியுள்ளார்.
ஆப்பிரிக்காவின் எதியோப்பாவை பூர்விகமாகக் கொண்ட டெட்ராஸ், எந்தெந்த நாடுகளிலெல்லாம் இந்த நிலை நீடிக்கிறதென பட்டியலிடவில்லை.
“இதற்கு முன்னரேவும் எய்ட்ஸ் தடுப்பூசி விநியோகத்திலும், பணக்கார நாடுகள் பாரபட்சம் காட்டின. தற்போது கொரோனா சூழலிலும், தடுப்பூசி விநியோகத்தில், பிரச்னை உள்ளது. எங்களுக்கும் தடுப்பூசி கொடுங்கள். இதன் பின்னணியில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள்யாவும் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் அநீதி, சமநிலையின்மையையே காட்டுகிறது” என ஏற்றத்தாழ்வுகளால் அவதியுறும் நாடுகளின் குரலாக பேசியிருக்கிறார் டெட்ராஸ்.
உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோயியல் நிபுணர் மைக் ரேயான் கூறுகையில், “வளர்ந்த நாடுகள் பலவும், தொழில்ரீதியாக முன்னேறிய நாடுகளை காட்டிலும் அதிகளவு காலரா – போலியோ போன்ற பல தொற்றுநோய் பாதிப்புகளுக்கு தங்கள் நாட்டிலுள்ள பெருவானியவர்களுக்கு தடுப்பூசி அளித்துள்ளது. ஆக, அந்த தடுப்பூசிகள் மீதும்கூட ஏற்றத்தாழ்வு நிகழ்கிறது.
‘உங்களுக்கு கொடுத்தால், நீங்கள் அதை வீணடித்துவிடுவீர்கள். நாங்கள் வீணடிக்காமல், இனிவரும் தலைமுறையையும் காப்போம்’ எனக்கூறி, நாட்டுப்பற்றை காரணம் காட்டி தடுப்பூசி விநியோகம் தடுக்கப்படுகிறது. கொரோனா நேரத்தில்கூட தடுப்பூசிகளை வளர்ந்த நாடுகள், தங்களிடம் சேமிப்புக்கிடங்கில் இருக்கும் தடுப்பூசியை பகிராமல் இருக்கிறது. பேரிடர் நேரத்திலும், இப்படி அதிகார மனப்பான்மையோடு எப்படி உங்களால் செயல்பட முடிகிறது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தடுப்பூசி ஏற்றத்தாழ்வை தடுக்கவும், ஏழை நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டுமெனக்கூறி உலக சுகாதார நிறுவனம், ‘கோவாக்ஸ்’ என்ற திட்டத்தை கடந்த பிப்ரவரி முதல் முன்னெடுத்து வருகிறது. அதன்மூலம் இதுவரை 9 கோடி தடுப்பூசிகள், 132 நாடுகளை சேர்ந்த எளியோருக்கு விநியோகம் செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும், இந்த முன்னெடுப்புக்கு, கடந்த சில மாதங்களாக போதிய அளவில் நாடுகளிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை என உலக சுகாதார நிறுவனத்தினர் கூறுகின்றனர். இந்தியாவில், தடுப்பூசி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடைக்கு பிறகே, இந்த சரிவு தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆலோசகர் ப்ரூஸ், “அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசிகள், சீரம் நிறுவனத்தின் தடுப்பூசிகள், ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகள் யாவும், இந்த மாதத்தில் ஒரு தடுப்பூசி கூட, எங்கள் முன்னெடுப்புக்கு கொடுக்கவில்லை. பூஜ்யம் என்ற நிலையில், டோஸ் கொடுத்திருக்கிறார்கள். தற்போது நிலைமை மிக மிக மோசமாக உள்ளது” எனக்கூறியுள்ளார்.
"தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களும், விநியோகிக்கும் நாடுகளே எங்களுக்கு (உலக சுகாதார நிறுவனத்துக்கு) தடுப்பூசி கொடுங்கள். நாங்களாவது ஏழை நாடுகளுக்கு அதை விநியோகிக்கிறோம்" என வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளார் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ராஸ் அதேனாம்.