ஒசாமா பின்லேடன் புதிய தலைமுறை
உலகம்

இணையத்தில் வைரலான ஒசாமா பின்லேடன் கடிதம்.. டிக்டாக் செயலி மூலம் அமெரிக்காவைக் குறிவைக்கும் சீனா?

அமெரிக்காவுக்கு ஒசாமா பின்லேடன் எழுதியதாகச் சொல்லப்படும் கடிதம் ஒன்று, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prakash J

ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தி, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசித் தாக்கினர். அதன்பின்னர் இஸ்ரேல் அதிகாரபூர்வமாக போர் பிரகடனம் செய்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போர் ஒரு மாதத்தைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்னதாக, வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் ராணுவம், தற்போது காஸாவுக்குள் நுழைந்து தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

இஸ்ரேல் ஹமாஸ் போர்

இதனால், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இது ஒருபுறமிருக்க மறுபுறம், இந்தப் போரில் உலக நாடுகளைப் பொறுத்தவரை பெரும்பாலான நாடுகள் ஹமாஸுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இதையும் படிக்க: ”இதை யார் செய்கிறார்களோ அவர்களுக்குதான் கோப்பை” - ஆஸி. முன்னாள் வீரர் மைக்கேல் பெவன் பிரத்யேக பேட்டி

இந்த நிலையில்தான் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன், பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு எழுதியதாகச் சொல்லப்படும் கடிதம் ஒன்று, இணையத்தில் வைரலாகி வருகிறது. 2001 செப்டம்பர் 11ஆம் நாள் உலகமே மறக்க முடியாத நாளாக அமைந்தது. அமெரிக்காவில் ஓங்கி உயர்ந்திருந்த இரட்டைக்கோபுரம் தலிபான்களால் தகர்க்கப்பட்டது. இந்த தாக்குதல் தொடர்பாக, அமெரிக்க ராணுவம், கடந்த 2011இல் ஒசாமா பின்லேடனைச் சுட்டுக் கொன்றது. கடந்த 2002இல் பின்லேடன் இந்த கடிதத்தை எழுதியிருந்ததாகக் கூறப்படுகிறது.

அதில் அவர், "நாங்கள் ஏன் போராடுகிறோம், ஏன் அமெரிக்காவை எதிர்க்கிறோம்? உங்களிடம் (அமெரிக்காவிடம்) இருந்து என்ன வேண்டும்" என்று பல கேள்விகளைக் கேட்டு, அதற்கான பதிலைக் கொடுத்திருப்பதாக அதில் சொல்லப்படுகிறது. அந்தக் கடிதத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பின்லேடன் கருத்து சொல்லி உள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே, தற்போது நடைபெற்று வரும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரை மையப்படுத்தி இது மீண்டும் பகிரப்பட்டிருப்பதாகவும், அதனாலேயே வைரலாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: "WCFinal: Aus 450/2.. Ind 65/10" - மிட்சல் மார்ஸின் பழைய கணிப்பை வறுத்தெடுக்கும் இந்திய ரசிகர்கள்!

சீன நாட்டு செயலியான டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டுமென்ற முழக்கத்தை அமெரிக்க நாடு முன்னெடுத்திருந்ததே, இந்தக் கடிதம் தற்போது இணையத்தில் வைரலாக முக்கியக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. முதலில் டிக் டாக் செயலியில் இது பகிரப்பட்டுள்ளது. அப்படியே காட்டுத் தீ போல மற்ற சமூக வலைதளங்களிலும் வைரல் ஆகியுள்ளது. இந்தியா மட்டுமல்லாது பல்வேறு உலக நாடுகள் டிக் டாக் செயலிக்கு தடை விதித்துள்ளன. அந்த வகையில், சீன நாட்டு செயலியான டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டுமென்ற முழக்கத்தையும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த அரசியல் பிரபலங்கள் முன்னெடுத்துள்ளனர். மேலும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் ஏழாம்பொருத்தமாக உள்ளது.

இந்த நிலையில்தான் சீன செயலி வாயிலாக ஒசாமா பின்லேடன் எழுதியதாகச் சொல்லப்படும் கடிதத்தை அமெரிக்காவுக்கு எதிராக வைரலாக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், இந்தக் கடிதத்தைப் பகிர்ந்து பலரும் இதுதொடர்பாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த கடிதம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மோதல்களில் அமெரிக்காவின் தலையீடு குறித்த கேள்வி எழுப்புவதாக நெட்டிசன்கள் பலரும் விமர்சித்துள்ளனர்.

அமெரிக்காவில் சமூக வலைதளங்களில் ஒசாமா பின்லேடனின் கடிதம் வைரல் ஆனதும் ஒருசில மீடியாக்கள் அந்தக் கடிதத்தை நீக்கியுள்ளன. அதேநேரத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த சில முக்கிய அரசியல் தலைவர்கள் டிக் டாக் செயலிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் எதிர்ப்பு காரணமாக, ஒசாமா கடிதம் சார்ந்த பதிவுகளை டிக் டாக் தளம் நீக்கி வருவதாகவும், இந்தப் பதிவுகள் தங்களது கொள்கை முடிவுகளை மீறி உள்ளதாகவும் அந்த தளம் தெரிவித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இதையும் படிக்க: உலகக்கோப்பை 2023: நெருங்க முடியாத ரன் வேட்டை.. தங்க பேட்டை 99% உறுதிசெய்த விராட் கோலி!