அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசினா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. இதற்கிடையே ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு, போராட்டத்தை முறியடிக்க சதி திட்டம் உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஷேக் ஹசினாவை நாடு கடத்த வேண்டும் என்று வங்காளதேச முக்கிய எதிர்க்கட்சியான பி.என்.பி கட்சி இந்தியாவிடம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து பி.என்.பி கட்சியின் பொதுச்செயலாளர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர், “ஷேக் ஹசினாவை வங்காளதேச அரசாங்கத்திடம் சட்டப்பூர்வமாக ஒப்படைக்க வேண்டும் என்பதே நாங்கள் இந்தியாவுக்கு வைக்கும் கோரிக்கை ஆகும். அவர் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று இந்நாட்டு மக்கள் விரும்புகிறார்கள். இதனால் விசாரணையை அவர் எதிர்கொள்ளட்டும். ஹசினா இந்தியாவில் தஞ்சம் அடைய அனுமதிக்கப்படுவது ஜனநாயகக் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கான நாட்டின் உறுதிப்பாட்டுடன் ஒத்துப்போகவில்லை” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர், “ஷேக் ஹசினாவின் குற்றங்களை மக்கள் சிறியதாக கருதவில்லை. ஷேக் ஹசினாவுக்கு அடைக்கலம் அளிப்பதன்மூலம் ஜனநாயகத்தின் மீதான உறுதிப்பாட்டை இந்தியா கடைப்பிடிக்கவில்லை. இந்தியாவில் தங்கியிருந்து, வங்காளதேசத்தில் நடந்த புரட்சியை முறியடிக்க பல்வேறு சதிகளை அவா் தொடங்கியுள்ளாா். வங்காளதேச மக்களின் எதிரிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதன்மூலம் இந்தியா, மக்களிடம் அதிக அன்பைப் பெற முடியும் என்று நான் நினைக்கவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
பி.என்.பி. கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான அமீர் கஸ்ரு மஹ்மூத் சவுத்ரி, ”நாட்டைவிட்டு வெளியேறியுள்ள ஷேக் ஹசினாவை இந்தியா விடுவிக்க வேண்டும். நாடு முழுவதும் ஷேக் ஹசினாவுக்கு எதிராக அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்துள்ளனர். இதனால் வரும் நாட்களில் இந்தியா -வங்கதேசம் இடையேயான உறவு நன்றாக இருக்க ஷேக் ஹசினாவை இந்தியா வெளியேற்ற வேண்டும்” என அவரும் வலியுறுத்தியுள்ளார்.