உலகம்

இடைவிடாமல் தொடரும் இந்தியர்களின் மீட்புப் பணி: புகாரெஸ்டிலிருந்து புறப்பட்ட 7வது விமானம்

இடைவிடாமல் தொடரும் இந்தியர்களின் மீட்புப் பணி: புகாரெஸ்டிலிருந்து புறப்பட்ட 7வது விமானம்

கலிலுல்லா

ருமேனியா தலைநகர் புகரெஸ்டிலிருந்து 182 இந்தியர்களுடன் 7ஆவது விமானம் புறப்பட்டது.

ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைனில் வாழும் இந்தியர்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். இதனை கருத்தில், 'ஆபரேஷன் கங்கா' என்ற பெயரில் அங்கு வசிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. உக்ரைன் வான்பகுதி மூடப்பட்டுள்ள நிலையில், அண்டை நாடுகளின் எல்லைக்கு வரவழைத்து இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். கடந்த 26ஆம் தேதி, ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 219 இந்தியர்கள் மீட்கப்பட்டு சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர்.

இதுவரை 6 விமானங்கள் மூலமாக தமிழக மாணவர்கள் உள்பட ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், புகாரெஸ்டிலிருந்து 182 இந்தியர்களுடன் 7ஆவது விமானம் புறப்பட்டுள்ளது. இதனிடையே இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 24ஆம் தேதியில் இருந்து கீவ் நகரில் தூதரகம் அருகே இருந்த 400 மாணவர்கள் ரயில்கள் மூலம் வெளியேறியதாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கீவ் நகரில் இருந்து உக்ரைனின் மேற்கு பகுதிகளுக்கு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீவ் நகரில் ஊரடங்கு விலக்கி கொள்ளப்படும்போது, மேற்கு பகுதிகளுக்குச் செல்ல இந்திய மாணவர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.