இஸ்ரேல் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், பாலஸ்தீனத்தில் உயிரிழப்பு 2 ஆயிரத்து 215 ஆக அதிகரித்துள்ளது. காசா தரைமட்டமாகி வரும் நிலையில், போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா அழைப்பு விடுத்தள்ளது. காசாவில் ஹமாஸ் படையினரை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் அப்பாவி மக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். இதுவரை 2 ஆயிரத்து 215 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 8 ஆயிரத்து 714 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் பாலஸ்தீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
காசாவில் உள்ள கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு முப்படை தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேலில் இருந்து மேலும் 274 இந்தியர்களுடன் 4ஆவது விமானம் டெல்லி வந்தடைந்தது. பத்திரமாக மீட்கப்பட்டு தாயகம் திரும்பிய அவர்களுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக, இஸ்ரேலில் இருந்து 3-வது சிறப்பு விமானம் மூலம் மேலும் 197 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். இஸ்ரேல் - ஹமாஸ் போர் காரணமாக அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனை அடுத்து ஆபரேஷன் அஜய் திட்டம் மூலம் இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்களை தாயகம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே 2 சிறப்பு விமானங்கள் மூலம் 447 பேர் இந்தியா திரும்பினர். இதில், சுமார் 50 பேர் தமிழர்கள் ஆவர்.
இந்த நிலையில், 3ஆவது சிறப்பு விமானத்தில் 197 பேரும், 4ஆவது சிறப்பு விமானத்தில் 274 இந்தியர்களும் டெல்லி வந்தடைந்தனர். தாயகம் திரும்பியவர்களுக்கு விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் கவுசல் கிஷோர் உற்சாக வரவேற்பு அளித்தார். 18 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள், இஸ்ரேலில் இருக்கும் நிலையில் தற்போது வரை 918 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்தியர்களை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள ரஷ்யா, போர் நிறுத்தம் தொடர்பாக ஐ.நாவில் வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருவதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளது.