உலகம்

2070க்குள் மூன்றில் ஒரு பங்கு தாவர, விலங்கினம் அழிந்துவிடும் - ஆராய்ச்சியாளர்கள்

webteam

பருவநிலை மாறுபாட்டால் 2070-க்குள் மூன்றில் ஒரு பங்கு தாவர, விலங்கினம் அழிந்துவிடும் என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

வெப்பமயமாதலால் நாளுக்கு நாள் உலகின் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. வெப்பநிலையில் மாற்றம், மாசு ஆகியவற்றால் பருவநிலையிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பருவநிலை மாறுபாட்டால் 2070-க்குள் மூன்றில் ஒரு பங்கு தாவர, விலங்கினம் அழிந்துவிடும் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த தேசிய அறிவியல் அகாடமியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பருவநிலை தொடர்பான ஆய்வை மேற்கொண்டு இந்த தகவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து தெரிவித்த ஆய்வாளர் ஒருவர், ''ஓரிடத்தில் பருவநிலை மாறுபட்டால் அங்குள்ள மக்கள் இடம்பெயர்ந்து விடுகின்றனர். ஆனால் அங்குள்ள தாவரங்கள், விலங்குகளால் இடம்பெயர முடியாத நிலை உள்ளது. 538 தாவர இனங்கள் குறித்து கடந்த 10 ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் பருவநிலை மாறுபாட்டால் 44% அழிந்துவிட்டது'' என்பது தெரியவந்தது என தெரிவித்தார்.

ஆய்வு குறித்து கருத்து தெரிவித்த ஆராய்ச்சியாளர் ஜான்.ஜே.வெயின்ஸ், ''இந்த ஆய்வு அதிகமான வெப்பநிலையிலும், குறைந்த வெப்பநிலையிலும் நடத்தப்பட்டது. சில தாவரங்கள் குறிப்பிட்ட வெப்பநிலை வரை மட்டுமே வாழ்கின்றன. வெப்பம் அதிகரித்தால் அந்த தாவரங்களால் தாக்குப்பிடிக்க முடிவதில்லை'' என தெரிவித்தார்.