இதுவோ டிஜிட்டல் யுகம். காசு, பணம் எல்லாம் டிஜிட்டல் மயமாகி வருகிறது. முன்பெல்லாம் தங்கள் தேவை போக கையில் இருக்கும் பணத்தை கொண்டு வீட்டு மனை வாங்குவது, தங்க நகை வாங்குவது, பங்குகள் வாங்குவது என முதலீடு செய்ய ஒரு சில ஆப்ஷன்கள் மட்டுமே இருந்தது. இப்போது அது பழங்கதையாகி விட்டது. டிஜிட்டல் யுகத்தில் கிரிப்டோ கரன்சி, அதை பயன்படுத்தி NFT வாங்குவது என உலக மக்கள் பலரின் லேட்டஸ்ட் முதலீடு சார்ந்த ட்ரெண்டாக உள்ளது.
இத்தகைய சூழலில் கவனக்குறைவினால் NFT விற்பனையில் ஒரே ஒரு தசம புள்ளியை மாற்றி வைத்ததால் 2.97 லட்சம் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளார் ‘குரங்கு பொம்மை’ NFT-யின் உரிமையாளர்.
கிரிப்டோ கரன்சிகளில் ஒன்றான எத்திரியம் கரன்சியாக அந்த உரிமையாளர் தன்னிடமிருந்த NFT-யை விற்பனை செய்யும் நோக்கில் லிஸ்ட் செய்துள்ளார். அவர் 75 எத்திரியம் என்ற விலைக்கு பதிலாக 0.75 எத்திரியம் என அதனை லிஸ்ட் செய்துள்ளார். இந்த தசம புள்ளிகளில் செய்த சிறிய தவறினால் அவருக்கு 2.97 லட்சம் அமெரிக்க டாலர்கள் அவருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 3 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் 2.28 கோடி) விற்க வேண்டிய அந்த குரங்கு பொம்மை NFT-யை வெறும் 3000 அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் 2.28 லட்சம்) அவர் விற்பனை செய்துள்ளார்.
அந்த NFT-யை வாங்கியவர் தனக்கு அது தாமதமின்றி கிடைக்க வேண்டுமென விரும்பிய காரணத்தினால் கூடுதலாக 34 ஆயிரம் அமெரிக்க டாலர்களை செலுத்தி பெற்றுள்ளார்.
“கண் அசந்த நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது” என தெரிவித்துள்ளார் 3000 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர்.