உலகம்

லிஸ் ட்ரஸ் பதவி விலகல்... இந்திய வர்த்தகத்தில் பிரச்னையா?அமைச்சர் பியூஷ் கோயல் சொல்வதென்ன?

லிஸ் ட்ரஸ் பதவி விலகல்... இந்திய வர்த்தகத்தில் பிரச்னையா?அமைச்சர் பியூஷ் கோயல் சொல்வதென்ன?

நிவேதா ஜெகராஜா

பிரிட்டன், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது ராஜினாமாவை அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தனது கட்சியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, பிரதமர் பதவியை ராஜினமா செய்துள்ளார் பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ். லிஸ் ட்ரஸ் பதவியேற்று 45 நாட்கள் தான் ஆகும் நிலையில் தனது பதவியை லிஸ் டிரஸ் ராஜினாமா செய்துள்ளார். நேற்று இங்கிலாந்து உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்த நிலையில், பிரிட்டனின் 3வது பெண் பிரதமரான லிஸ் டிரஸும் ராஜினாமா செய்துள்ளார். 

பிரிட்டன் பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வான போது பிரிட்டனின் மந்தமான பொருளாதாரத்தை மீட்க உறுதியெடுத்தார் லிஸ் டிரஸ். அதனை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். ஆனால், லிஸ் டிரஸ் எடுத்த எந்த நடவடிக்கையும் பிரிட்டன் பொருளாதாரத்தை மீட்க உதவவில்லை என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. மேலும், டாலருக்கு நிகரான பிரிட்டனின் பவுண்டின் மதிப்பு தொடர்ந்து குறைந்து, பங்கு சந்தை மதிப்பும் வீழ்ச்சி அடைந்தன.

இந்நிலையில் அவரது ராஜினாமா குறித்து பேசியுள்ளார் இந்திய அமைச்சர் பியூஷ் கோயல். இதுதொடர்பாக அவர் கூறியுள்ள தகவல்களின்படி, “இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. பிரிட்டிஷ் தலைமையின் மாற்றத்தைத் பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார். முன்னதாக 2030ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 100 பில்லியன் டாலராக இரட்டிப்பாக்குவதை இலக்காகக் கொண்ட உடன்படிக்கைக்கு இந்தியாவும் பிரிட்டனும் இந்த ஆண்டு ஜனவரியில் பேச்சுவார்த்தைகளை தொடங்கியிருந்தன.