உலகம்

அம்மா இறந்த தினத்தில் தான் அப்பாவையே பார்த்தேன்: 10வயது சிறுமியின் உருக்கம்

அம்மா இறந்த தினத்தில் தான் அப்பாவையே பார்த்தேன்: 10வயது சிறுமியின் உருக்கம்

webteam

இலங்கையைச் சேர்ந்த ஒரு சிறுமி, பாசப் போராட்டத்தில் சிக்கித் தவித்து வருகிறார். தாய் உயிரிழந்த நாளில் தந்தையை முதன்முறையாகப் பார்த்ததாக அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் கடந்த 2008ம் ஆண்டு அரசியல் கைதியாக சிறைபிடிக்கப்பட்டவர் கிளிநொச்சியைச் சேர்ந்த சச்சிதானந்த ஆனந்த சுதாகர். 10 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஆனந்த சுதாகரின் மனைவி யோகராணி கடந்த 15ம் தேதி உயிரிழந்தார். மனைவியின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக மகசின் சிறையில் இருந்து அழைத்துவரப்பட்டார். அப்போதுதான் அவரை முதல்முறையாக பார்த்தார் அவரது 10 வயது மகள் சங்கீதா. இறுதிச்சடங்கு முடிந்த பின்னர் சச்சிதானந்தம் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, காவல்துறை வாகனத்தில் ஏறிக்கொண்டு அப்பாவுடன் சிறை செல்வதாக சங்கீதா கூறியதை பார்த்த அனைவரின் கண்களும் கலங்கின.  

இந்த நிலையில், தற்போது தாயை பிரிந்து வாடும் தான் வரும் காலத்தை தனது தந்தையுடன் வாழ விருப்புவதாக, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் மகள் சதுரிகாவுக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார் சங்கீதா. அதில், தனது அம்மா இறந்த வீட்டில்தான் தந்தையை முதல் முறையாக காண முடிந்ததாகவும், கொஞ்சம் நேரம்தான் அப்பாவின் மடியில் அமர்ந்ததாகவும் கூறியுள்ளார். தந்தையின் பாசத்தை அறிந்தவர் என்ற முறையில் தமது தந்தையை மன்னித்து சிறையிலிருந்து விடுவிக்கும்படி அதிபராக உள்ள சிரிசேனாவிடம் சொல்லும்படி சங்கீதா கேட்டுக்கொண்டுள்ளார். தனது அப்பா இல்லாத வீட்டில் வாழ பிடிக்கவில்லை என்றும் அந்த கடிதத்தில் சிறுமி சங்கீதா தெரிவித்துள்ளார்.