OCDA Facebook
உலகம்

‘முதலாளியை திட்டவேண்டுமா? எங்ககிட்ட வாங்க...’ - பிரத்யேக சேவையை அறிமுகம் செய்த அமெரிக்க நிறுவனம்!

அமெரிக்காவில் பாஸை திட்டுவதற்கென்றே பிரத்யேக சேவை வழங்கப்பட்டுள்ளது தற்போது இணையதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

அமெரிக்காவில் ஊழியர்கள் தங்களின் அடையாளமே வெளியே தெரியாமல் அவர்களின் பாஸை திட்டி தீர்ப்பதற்கென்றே பிரத்யேக சேவை ஒன்றை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொழிலாளிகளுக்கும், முதலாளிகளுக்கும் இடையேயான உறவு என்பது பெரும்பாலான நிறுவனங்களில் எலியும் பூனையுமாகவே இருக்கும். நேரடியாக முதலாளியை திட்டினால் எங்கு வேலைக்கு பாதிப்பு வந்துவிடுமோ என்பதற்காக பலர் கோபத்தை அடக்கி கொண்டுதான் வேலையையே செய்யும் நிலைமையை பார்க்க முடிகிறது.

ஆனால், இதற்காகதான் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று, ஊழியர்கள் தங்களின் அடையாளமே வெளியே தெரியாமல் அவர்களின் பாஸை திட்டி தீர்ப்பதற்கென்றே OCDA என்ற பிரத்யேக சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்டார்ட் அப் நகைச்சுவை நடிகரும், கிட்டதட்ட 2,80,000 இன்ஸ்டாகிராம் பாலோவர்களையும் கொண்ட கலிமர் வைட்டால் என்னும் நபர்தான் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இச்சேவையை ஆரம்பித்துள்ளார்.

இந்நிறுவனத்திடம் சென்று ஊழியர்கள் தங்களின் குறைகளை சொன்னால் இதற்காகவே பயிற்சி பெற்ற நபரை அலுவலகத்திற்கு அனுப்பி தயாரிக்கப்பட்ட ஸ்கிரிப்டுகளின் உதவியுடன் boss-ஐ திட்ட வைக்கின்றனர். அதுமட்டுமல்ல, இவர்களிம் போனில் திட்டும் வசதியும் உள்ளதாம். இப்படி திட்டியது தொடர்பான வீடியோக்கள், OCDA-வின் யூட்டியூப் சேனலில் பதிவு செய்யப்படுகிறது.

கலிமர் வைட்டால்

இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின்படி, “புகார்களை சரிசெய்வதற்கும் சிறந்த பணிச்சூழலை உருவாக்குவதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு லாப நோக்கமற்ற அமைப்பாக இது செயல்படுகிறது.. ஊழியர்களுக்கு பணியிடத்தில் தகுந்த மரியாதையை வளர்க்கும் நோக்கத்தோடு புகார்கள் பெறப்பட்டு அவற்றை சரிசெய்வதே எங்கள் நோக்கம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதராணமாக, சமீபத்திய வீடியோ ஒன்றில்,Mr LJ என்று குறிப்பிடும் நபரை திட்டுவதற்கு, சம்பந்தப்பட்ட இடத்திற்கு OCDA ஊழியர் தகுந்த ஸ்கிரிப் உடன் சென்று திட்டி இருக்கிறார்.

அதில், “நான் 17 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே வேலை செய்து வருகிறேன். ஆனால் நீங்கள் எனக்கு PTO (சம்பள விடுமுறை) கொடுக்கவில்லை. புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கெல்லாம் அதிக பணம் கொடுக்கிறீர்கள். மோல்டிங் பிரிவில் மின்விசிறி இல்லை…” என்று திட்டிவிட்டு வந்துள்ளார்.

OCDA ஊழியரை அலுவலகத்தை விட்டு வெளியேறுமாறு பலமுறை கூறியும், திட்டமிட்டபடி, ஸ்கிர்ப்டில் என்ன இருக்கிறதோ அது முழுவதையும் முடித்துவிட்டுதான் வெளியேறியுள்ளார். இந்தநிலையில், கலிமர் வைட்டை புத்திசாலி என்றும், விரைவில் கோடீஸ்வரர் ஆகி விடுவார் என்றும் கூறி நெட்டிசன்கள் இவரை பாராட்டி வருகின்றனர்.