உலகம்

அணு ஆயுத சோதனை நடத்துவோம்: வடகொரியா எச்சரிக்கை

அணு ஆயுத சோதனை நடத்துவோம்: வடகொரியா எச்சரிக்கை

webteam

சர்வதேச தடைகளை நீக்காவிட்டால் மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த வேண்டியிருக்கும் என அமெரிக்காவுக்கு, வடகொரியா திடீரென எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவை மிரட்டி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், திடீரென அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் தயாரிப்பை கைவிட முடிவு செய்வதாக அறிவித்தார். மேலும் அமெரிக்க அதிபர் ட்ரம்பை, சிங்கப்பூரில் சந்தித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனையில் ஈடுபட்டார். சந்திப்புக்குப் பின், கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டார். 

மேலும் தங்களிடம் இருக்கும் அணு ஆயுதங்களையும் முழுமையாக கைவிடுவதற்கும் முன் வந்தார். அதற்கு பிரதிபலனாக வடகொரியா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என அமெரிக்காவை அவர் கேட்டுக் கொண்டார். எனினும், அந்தத் தடை எப்போது நீக்கப்படும், அதற்கான நடைமுறைகள் என்ன என்பது குறித்த விவரங்களை ட்ரம்ப் இதுவரை அறிவிக்கவில்லை. 

இதனால் அதிருப்தி அடைந்துள்ள வடகொரியா, சர்வதேச தடைகளை விரைந்து நீக்காவிட்டால், மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த வேண்டியிருக்கும் என அமைதி பேச்சுவார்த்தைக்குப் பின் முதல் முறையாக எச்சரித்துள்ளது. வெறுமனே அணு ஆயுதங்களை கைவிட வேண்டும் என வலியுறுத்துவதும், அதற்கு அடிபணிவதற்காக கூடுதல் அழுத்தங்களை கொடுப்பதும் ஒருபோதும் பலன் தராது என்றும் வடகொரிய வெளியுறவுத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.