அமெரிக்காவிற்கு சொந்தமான குவாம் தீவை தாக்கப்போவதாக வடகொரியா எச்சரித்துள்ளதால், ஜப்பான் மற்றும் தென்கொரிய மக்கள் பீதியடைந்துள்ளனர்.
குவாம் தீவைத் தாக்கப் போவதாக வடகொரியா அறிவித்திருப்பதால் தென் கொரியா மற்றும் ஜப்பான் நாட்டு மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. கொரியப் பிராந்தியத்தில் போர் நடந்தால் அது தங்கள் நாட்டுக்குப் பேரழிவாக அமையும் என இரு நாட்டு மக்களும் தெரிவித்துள்ளனர். பெரிய அழிவுகள் சிறிய வடிவிலேயே தொடங்கும் எனச் சிலர் கருத்துத் தெரிவித்தனர். அதே நேரத்தில் இது வழக்கமான மிரட்டலாகவே இருக்கும் என சிலர் நம்பிக்கை தெரிவித்தனர்.
வடகொரியா விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இருக்கப்போவதாக ஜப்பான் அறிவித்திருக்கிறது. குவாம் தீவை தாக்கப் போவதாக வடகொரியா மிரட்டியிருப்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் ஜப்பான் கூறியிருக்கிறது. ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செயலர் இந்தத் தகவலைத் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் ட்ரம்பின் எச்சரிக்கை வெளியான சில மணி நேரங்களில் ஜப்பானின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.