வடகொரியா நாட்டின் ரகசியங்கள் அவ்வளவு எளிதில் வெளிவருவதில்லை. அதுமட்டுமின்றி கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் அங்கே கடுமையானது என்று சொல்லப்படுவதும் உண்டு. இப்படி, பல வினோத கட்டுப்பாடுகள் இருக்கும் வடகொரியா அடிக்கடி ஏவுகணைகளை ஏவி பரிசோதித்து வருகிறது. இந்த நிலையில், அண்டை நாடான தென்கொரியா எல்லைக்குள் இரண்டு ராட்சத பலூன்களுக்குள் குப்பைகளை கட்டி வடகொரியா அனுப்பி வைத்திருப்பதாக அந்த நாட்டு அதிகாரிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
அதில் ராட்சத பலூனில் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பேட்டரிகள், ஷூ பகுதிகள், கழிவுகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடகொரியாவின் இந்த செயல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக தெரிவித்த தென்கொரியா, இத்துடன் இந்த தரம்தாழ்ந்த செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளது. அதேசமயம் எல்லை அருகில் அமைந்துள்ள ஜியோங்க்கி, கங்வோன் மாகாணத்தில் உள்ள உள்ளூர் அரசு நிர்வாகிகள், அடையாளம் தெரியாத பொருட்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் வெளியில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.