குப்பை பலூன் எக்ஸ் தளம்
உலகம்

மீண்டும் குப்பைப் பலூன்கள்| தென்கொரியாவுக்குப் பதிலடி கொடுத்த வடகொரியா!

அண்டை நாடான தென்கொரியா எல்லைக்குள் மீண்டும் ராட்சத பலூன்களுக்குள் குப்பைகளை கட்டி வடகொரியா அனுப்பி வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Prakash J

வடகொரியா நாட்டின் ரகசியங்கள் அவ்வளவு எளிதில் வெளிவருவதில்லை. அதுமட்டுமின்றி கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் அங்கே கடுமையானது என்று சொல்லப்படுவதும் உண்டு. இப்படி, பல வினோத கட்டுப்பாடுகள் இருக்கும் வடகொரியா அடிக்கடி ஏவுகணைகளை ஏவி பரிசோதித்து வருகிறது.

இந்த நிலையில், அண்டை நாடான தென்கொரியா எல்லைக்குள் மீண்டும் ராட்சத பலூன்களுக்குள் குப்பைகளை கட்டி வடகொரியா அனுப்பி வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம்’ என வடகொரியா எச்சரித்து வரும் நிலையில், அந்நாட்டிற்கு எதிரான வாசகங்களுடன்கூடிய காகிதங்களை தென்கொரியா அந்த நாட்டு எல்லையில் வீசியிருந்தது பேசுபொருளானது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா சிகரெட் துண்டுகள், வெற்று காகிதங்கள், கிழிந்த துணிகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற குப்பைகள் அடங்கிய ஏராளமான 2 பலூன்களை முதல்முறையாக அனுப்பியிருந்தது. அடுத்து சில தினங்களில் 700க்கும் மேற்பட்ட குப்பை பலூன்களை தென்கொரியாவுக்கு அனுப்பியது. தொடர்ந்து 3வது முறையாகவும் குப்பை பலூன்களை அனுப்பியிருந்தது.

இதையும் படிக்க: "இந்தியாவில் வெறுப்புப் பேச்சு, சிறுபான்மையினர் மீது தாக்குதல் அதிகரிப்பு"- அமெரிக்கா குற்றச்சாட்டு!

இந்த நிலையில் மீண்டும் குப்பைப் பலூன்களை வடகொரியா அனுப்பியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் வடகொரியாவில் இருந்து 100க்கும் மேற்பட்ட குப்பைப் பலூன்கள் விழுந்ததாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் இப்பலூன்கள் தலைநகர் சியோல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விழுந்ததாகவும், அவற்றில் வெறும் காகிதங்கள் அடங்கியிருந்ததாகவும் தென் கொரியா தெரிவித்துள்ளது.

முன்னதாக, தென்கொரியா ஒலிபெருக்கி மூலம் வடகொரியா எல்லையில் எதிர்ப்பு பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில்தான் இந்தப் பலூன்கள் அனுப்பிவைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ”ஒருத்தருக்கு சார்பா நடக்குதா”-ரிசர்வ் டே ஏன் இல்லை? விமர்சனத்தை சந்திக்கும் 2வது அரையிறுதி போட்டி!