வடகொரியா நேற்று ஏவுகணை சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், அந்த ஏவுகணை அனுப்பப்பட்டது எதற்காக? என்று வட கொரியா விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்காவின் எச்சரிக்கையும் மீறி, வடகொரியா ஏவுகணை சோதனை நடத்துவது தொடர் கதையாகி வருகிறது. நடப்பாண்டு ஜனவரி தொடங்கி இப்போது வரை கிட்டதட்ட இரண்டே மாதங்களில் 8 ஏவுகணை சோதனைகளை அந்நாடு நடத்தியிருக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் அணு ஆயுத ஏவுகணைகள் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.
எனினும், இதனை வடகொரியா மறுத்து வருகிறது. வட கொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகள், அதன் அண்டை நாடுகளான தென் கொரியா மற்றும் ஜப்பானுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், நேற்று ஒரு ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியது. இதுவும், பிற நாடுகளை தாக்கும் வகையிலான ஏவுகணைச் சோதனை என தென் கொரியா குற்றம்சாட்டி இருந்தது. இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள வட கொரிய ராணுவம், ஏவுகணை கண்காணிப்பு அமைப்பை மேம்படுத்துவதற்காகவும், ஏவுகணைகளில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராக்களின் திறனை சோதிப்பதற்காகவுமே இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.