கிம் ஜாங் உன் ட்விட்டர்
உலகம்

”வடகொரிய பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும்”- மேடையில் கண்ணீர்விட்டு அழுத கிம் ஜாங் உன்!

நாட்டில் உள்ள பெண்கள் அதிகமான குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும்” என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

Prakash J

வல்லரசு நாடான அமெரிக்காவுக்கே அடிக்கடி கிலி ஏற்படுத்தும் நாடாக இருக்கிறது, வடகொரியா. அமெரிக்கா மட்டுமல்ல, அண்டை நாடான தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கும் அதே பயம்தான் உள்ளது. காரணம், அது எந்த நேரத்தில் என்ன செய்யும் எனத் தெரியாததுதான். அந்நாட்டின் ரகசியங்கள் மற்ற நாடுகளைப் போன்று உடனே வெளியில் தெரிவதில்லை. அப்படியான கொடூர கட்டுப்பாடுகளைத் தன் குடிமக்களுக்கு விதித்துள்ளது வடகொரியா. இந்த நாட்டின் அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார்.

இந்த நிலையில், ”நாட்டில் உள்ள பெண்கள் அதிகமான குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும்” என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். தலைநகர் பியாக்யாங்கில் நடந்த பெண்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ”நம் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துவருகிறது. இதனால் பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் நம் நாட்டைப் பாதுகாக்கும். பிறப்பு விகிதம் குறைவதைத் தடுப்பது மட்டுமின்றி, குழந்தைகளைப் பராமரித்து நன்றாக வளர்க்க வேண்டும்.

முறையாக கல்வி வழங்க வேண்டும். இதனை செய்ய நான் தயாராக இருக்கிறேன்'' எனப் பேசினார். இப்படி அவர் பேசியபோது, தன்னையும் மீறி கண்கலங்கினார். இதையடுத்து அவர் தனது கையில் இருந்த கைக்குட்டையை எடுத்து கண்ணீரைத் துடைத்துக்கொண்டார். இதைப் பார்த்து சில பெண்களும் கண்ணீர் வடித்தனர். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: மீண்டும் ஓர் எல்லை தாண்டிய காதல்: ஐந்தரை ஆண்டு காத்திருப்புக்குப் பின் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்!

வடகொரியாவில் தற்போது குழந்தை பிறப்பு விகிதம் சரிந்து வரும் நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, தற்போதைய சூழலில் ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி நடப்பு ஆண்டில் வடகொரியா பெண்களிடம் குழந்தை பிறப்பு சராசரி என்பது 1.8 என்ற அளவில் உள்ளது. இது வடகொரியாவின் அண்டைநாடுகளைவிட அதிகம்தான். இருப்பினும் பெண்கள் அதிகமாக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என கிம்ஜாங் உன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிம் ஜாங் உன், விளாடிமிர் புதின்

முன்னதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தன் நாட்டுப் பெண்கள் 8 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனப் பேசியிருந்ததுடன், அதற்கு, முன்னோர்கள் அதிக குழந்தை பெற்றெடுத்ததையும் உதாரணமாகக் காட்டியிருந்தார். அந்த நாட்டில் தற்போது வரை 3 லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, படைபலத்தைப் பெருக்கும் வகையில் அங்கு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அரசு ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது.

இதே கருத்தை வடகொரியாவும் வைத்துத்தான், குழந்தை பிறப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருப்பதாக உலக அரசியலாளர்கள் கருதுகின்றனர். காரணம், அந்நாடும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ’போருக்குத் தயாராக இருங்கள்’ என தன் நாட்டு ராணுவ வீரர்களுக்கு கட்டளையிட்டிருந்தது. ஒருவேளை, பிற நாடுகளுக்கு எதிராக வடகொரியா போரில் களமிறங்கி, அதனால் உயிர்ப்பலி அதிகரிக்கும் என்பதால், தற்போதே குழந்தைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: சுட்டுக் கொல்லப்பட்ட கர்னி சேனா தலைவர்! வெடித்த போராட்டம்; பரபரப்பில் ராஜஸ்தான்..ஆலோசனையில் ஆளுநர்!