கிம் ஜாங் உன் freepik and x page
உலகம்

தொடரும் மோதல்|சாலைகள் வெடிவைத்து தகர்ப்பு.. தென்கொரியாவை முதல்முறையாக எதிரிநாடாக அறிவித்த வடகொரியா!

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு இடையே அதிகரித்து மோதல்களுக்கு இடையில், தென்கொரியாவை தனி நாடாகவும் விரோத நாடாகவும் வடகொரியா அறிவித்திருப்பது உலக நாடுகளிடம் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Prakash J

வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீடித்துவரும் எல்லைப் பிரச்னையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது, அணு ஆயுத மூலப்பொருளான யுரேனியம் தயாரிக்கும் பணியிலும் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. வடகொரியா இந்த அளவிற்கு யுரேனியம் தயாரிக்கும் பணியிலும் ஏவுகணை சோதனைகளிலும் ஈடுபடுவதற்கு மிக முக்கியமான காரணமே, தென்கொரிய நாடானது அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதுதான். இதற்கு வடகொரியா கண்டனம் தெரிவித்திருந்தும் தொடர்ந்து தென்கொரியா அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இதையடுத்து, ”தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அடுத்தகட்ட நடவடிக்கையாக, தென்கொரியாவுடனான எல்லைப் பகுதிகளை நிரந்தரமாக துண்டித்தது. இதன்படி வடகொரியாவில் இருந்து தென்கொரியா செல்லும் சாலை, ரயில்வே வழித்தடங்களை மூடியுள்ளது. மேலும், எல்லைப்பகுதிகளில் கண்ணிவெடிகளைப் புதைத்து, தடுப்புகள் ஏற்படுத்தி, கூடுதல் ராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் ஒருவாரம்கூடக் கடக்காத நிலையில், வடகொரிய அரசு அடுத்த அதிரடியில் இறங்கியுள்ளது. அந்த வகையில், இருகொரியாவையும் இணைக்கும் முயற்சியை கைவிட வடகொரியா அரசு அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது. அதில், தென்கொரியாவை முதல்முறையாக ஓர் எதிரி நாடு என்று குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிக்க: உக்ரைன் போர்|’ரஷ்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய 12,000 வடகொரிய ராணுவ வீரர்கள்’- தென்கொரியா குற்றச்சாட்டு

’தென்கொரியாவை நாட்டின் பிரதான எதிரியாக அறிவிக்கவும், அமைதியான கொரிய ஒருங்கிணைப்பு என்ற இலக்கை அகற்றவும், வடகொரியாவின் இறையாண்மை வரையறுக்கும் வகையில், அந்நாட்டில் சமீபத்தில் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது. இதையடுத்தே, அங்கு அரசியலமைப்பு திருத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை உருவாக்க கடந்த ஜனவரி மாதமே வடகொரிய அதிபர் திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. என்றாலும் இந்த மாற்றத்திற்குப் பின்பே, இரு நாடுகளுக்கு இடையிலான சாலை மற்றும் ரயில் இணைப்புப் பாதைகளை வடகொரியா தனது ராணுவத்தின் மூலம் வெடிவைத்து தகர்த்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தென்கொரியா, இருகொரியாவையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது. தென்கொரியா மற்றும் வடகொரியா இடையே அதிகரித்து வரும் இந்த மோதல் போக்கு இருநாட்டு உறவு மட்டுமன்றி உலக நாடுகளுக்கும் பங்கம் விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. தென்கொரியா மீது அணு ஆயுதங்களைத் தாக்கி அழிக்கலாம் என்பதற்காகவே வடகொரியா, அந்த நாட்டை எதிரி நாடு என அறிவித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. முன்னதாக, கிம் ஜாங் உன், “எதிரி நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதத்தைப் பயன்படுத்தவும் தயங்க மாட்டோம்” என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இஸ்ரேல் - காஸா போர்| ”முடிவுக்கு வர ஹமாஸ் இதைச் செய்ய வேண்டும்” - பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தல்!