வடகொரியாவில் இருந்து அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் பொதுமக்களை பாதுகாக்கும் விதத்தில் ஹவாய் தீவில் எச்சரிக்கை மணி அமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்குச் சொந்தமான ஹவாய் தீவில் இந்த அணு ஆயுத தாக்குதல் எச்சரிக்கை மணி வரும் முதல் தேதியில் பரிசோதிக்கப்பட உள்ளது. இது குறித்து ஹவாய் அவசர நிலை நிர்வாக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், டிசம்பர் ஒன்றாம் தேதி இந்த மணி பரிசோதிக்கப்படும் எனவும் அதன்பிறகு ஒவ்வொரு மாதமும் முதல் வேலை நாளில் பரிசோதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பரிசோதனை அல்லாத நேரங்களில் இந்த மணி ஒலிக்கும் பட்சத்தில் பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று விட வேண்டும் எனவும் அந்த அறிக்கை அறிவுறுத்தியுள்ளது. அணு ஆயுதத் தாக்குதலின் ஆபத்து வருவதற்கு அனேகமாக 12 அல்லது 15 நிமிடங்களுக்கு முன் இந்த எச்சரிக்கை மணி ஒலிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
ஐநா பாதுகாப்பு கவுன்சில் பல்வேறு தடைகளை விதித்தாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வடகொரியா தனது அணு ஆயுதத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் வடகொரியா, அமெரிக்காவின் நேசநாடான ஜப்பான் வான் பகுதியில் இரண்டு முறை ஏவுகணைகளை வெடிக்கச் செய்து பீதியை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லமல் கடந்த செப்டம்பர் 3ம் தேதியன்று அதன் ஆறாவது மற்றும் மிகப்பெரிய அணு ஆயுதச் சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்தது.