ஹான் காங் எக்ஸ் தளம்
உலகம்

இலக்கியத்திற்கான நோபல் பரிசு| தென்கொரிய எழுத்தாளருக்கு அறிவிப்பு.. யார் இந்த ஹான் காங்?

Prakash J

உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. அதாவது, ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான நோபல் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, கடந்த அக்டோபர் 6ஆம் தேதி, முதலாவதாக மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கு இவ்விருது கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோ ஆர்என்ஏவை கண்டறிந்ததுடன் மரபணு ஒழுங்கமைப்பிற்கு பின் அவற்றின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்காக இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: காற்றில் கலந்த உயிர் | ”ஒரு போரால் எங்கள் காதல் முறிந்தது”.. வைரலாகும் ரத்தன் டாடாவின் காதல் கதை!

அடுத்து, இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு ஜான் ஹாப்ஃபீல்ட் மற்றும் ஜெஃரி ஹிண்டன் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயந்திரக் கற்றலுக்கான அடித்தள கட்டமைப்பு முறையை இயற்பியல் மூலம் எளிதாக்கிய கண்டுபிடிப்புக்காக இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து, வேதியியல் துறைக்கான நோபல் பரிசு, புரதத்தின் வடிவம் குறித்த ஆராய்ச்சிக்காக, டேவிட் பேக்கர், டெமிஸ் ஹசாபிஸ், ஜான் ஜம்பர் ஆகிய மூன்று ஆராய்ச்சியாளர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 53 வயதாகும் இவர், ’தி வெஜிடேரியன் தி ஒயிட் புக்’ உள்ளிட்ட ஏராளமான கவனம்ஈர்த்த புத்தகங்களை எழுதியுள்ளார். தென்கொரிய நாட்டின் இலக்கியத் துறைக்கான பல்வேறு முக்கிய விருதுகளைப் பெற்றுள்ள இவர், 2016ஆம் ஆண்டு ’மேன் புக்கர்’ சர்வதேச பரிசையும் வென்றுள்ளார். ’தி நியூயார்க்’ பத்திரிகையின் 2016ஆம் ஆண்டிற்கான சிறந்த 10 புத்தகங்களில் இவர் எழுதிய புத்தகம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. இயல்பிலேயே கவிஞரான இவர், தனது கவித்துவமான படைப்புகள் மூலமாகப் பிரபலமாக அறியப்பட்டவர் இவரது படைப்புகள் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு| தமிழகத்திற்கு ரூ.7,268 கோடி விடுவிப்பு; உ.பி-க்கு இவ்வளவு கோடிகளா?