இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சட்டப் பேரவை உடன் கூடிய யூனியன் பிரதேசமாக அறிவித்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு விவகாரம் என்று இந்திய தரப்பில் பதில் கூறப்பட்டது. இதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் இந்த விவகாரத்தை ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்து சென்றது. எனினும் பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானின் முயற்சி தோல்வியடைந்தது.
இதனையடுத்து காஷ்மீர் விவகாரத்தை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கருத்து தெரிவித்தன. இந்நிலையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து,“இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடுத்துவதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை. ஏனென்றால் ஏற்கெனவே இந்தியாவுடன் பேச வேண்டியது எல்லாம் நான் பேசிவிட்டேன். நான் இருநாடுகளுக்கு இடையே அமைதி நிலவ வேண்டும் என்று பேசியதற்கு நல்ல முடிவு எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு மேல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக உலக நாடுகள் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து, பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு அளித்து வரும் நிதி உதவியை நிறுத்தினால் மட்டுமே இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.