உலகம்

"தவறு செய்யாதீங்க; உங்களால தங்க முடியாது" - சட்டவிரோத புலம்பெயர்வை தடுக்க ரிஷி சுனக் செக்!

"தவறு செய்யாதீங்க; உங்களால தங்க முடியாது" - சட்டவிரோத புலம்பெயர்வை தடுக்க ரிஷி சுனக் செக்!

webteam

”சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் தஞ்சம் கோரி இனி இங்கிலாந்தில் விண்ணப்பிக்க முடியாது” என அந்நாட்டுப் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில், கடல்வழியாகப் படகுகளில் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களைத் தடுக்கும் வகையில் ரிஷி சுனக்கின் அரசாங்கம் இந்த வார பிற்பகுதியில் சட்டவிரோத குடியேற்றத்தை ஒடுக்குவதற்கான சட்டத்தை முன்வைக்க இருக்கிறது. இந்த புதிய சட்டப்படி, கடல்வழியாகச் சிறு படகுகள் வழியாக இங்கிலாந்திற்குள் நுழைய முயல்பவர்கள் நிரந்தரமாக தடை செய்யப்படுவார்கள் என்றும் அதற்கான பொறுப்பு உள்துறைச் செயலாளருக்கு கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து நேற்று உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த இங்கிலாந்து நாட்டுப் பிரதமர் ரிஷி சுனக், ”புலம்பெயர்ந்து வரும் படகுகளை தடை செய்வதுதான் முதல் கடமை. தவறு செய்யாதீர்கள், நீங்கள் சட்டவிரோதமாக இங்கு வந்தாலும் உங்களால் இங்கு தங்க முடியாது. புலம்பெயர்ந்தோர்கள் தங்க அனுமதி இல்லை. இங்கிலாந்தில் வரி செலுத்துவோருக்கு நாம் செய்யும் நியாயமான காரியம் இதுவல்ல. சட்டவிரோத இடம்பெயர்வு நியாயமானது அல்ல, சட்டப்பூர்வமாக இங்கு வருபவர்களுக்கும் இது நியாயமானது இல்லை. குற்றம் செய்யும் கும்பல்களின் ஒழுக்கக்கேடான வர்த்தகத்தைத் தொடர அனுமதிப்பது சரியல்ல. இதுகுறித்து நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எல்லையைத் தாண்டிய பிறகு தஞ்சம் கோர அனுமதிக்கும் சட்டங்கள் உள்ளன. பொதுவாக, புலம்பெயர்ந்தோர் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் புதிய சட்டம் அத்தகைய புலம்பெயர்ந்தோர்கள் தஞ்சம் கோருவதைத் தடுக்கும் எனச் சொல்லப்படுகிறது. பிரான்ஸிலிருந்து இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்து வரும் நபர்களைத் தடுக்கும் வகையில், இங்கிலாந்து நீண்டகாலமாக முயற்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்