உலகம்

”இந்திய பட்ஜெட்டில் எங்களுக்கு கடன் வழங்கவில்லையே” - வைரலாகும் பாகிஸ்தான் நபரின் பதிவு!

”இந்திய பட்ஜெட்டில் எங்களுக்கு கடன் வழங்கவில்லையே” - வைரலாகும் பாகிஸ்தான் நபரின் பதிவு!

webteam

மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பாகிஸ்தான் நபர் ஒருவர், நகைச்சுவையாய் வெளியிட்டிருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

2023-24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன்படி, வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்க ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு 7.5 சதவிகித வட்டியில் புதிய சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகின. இதனால் பலர் இந்த பட்ஜெட்டை வரவேற்றியிருப்பதுடன், எப்போதும்போல சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஷாபாஸ் ஷெரீஃப் என்பவர் வாட்ஸ் அப்பில் பதிவிட்டிருப்பதாகச் செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. அவர், ”இந்திய அரசின் பட்ஜெட்டில் ஏமாற்றம். எங்களுக்கு (பாகிஸ்தான்) கடன் வழங்குவதற்கான எந்த அறிவிப்பும் இல்லை’’ என வாட்ஸ் அப்பில் பதிவிடப்பட்டிருப்பதாகத் தெரிவித்து, அருண் கிருஷ்ணன் என்பவர் அந்தப் பதிவை தன்னுடைய ட்விட்டர் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

பாகிஸ்தான் சமீபகாலமாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது என்பதைக் காரணமாய்க் காட்டி அவர் இப்படி நகைச்சுவையாய்ப் பதிவிட்டுள்ளார். பாகிஸ்தான், கடன், பெட்ரோலியச் செலவுகள், குறைந்து வரும் அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பாகிஸ்தானில் மின்சாரம் மற்றும் சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன், அத்தியாவசிய உணவுகளின் விலையும் அதிகரித்துள்ளது.