இந்தியாவில் முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்ய AW101 ரக அதிநவீன ஹெலிகாப்டர்கள் 12 வாங்க காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. அதற்காக, 2010ம் ஆண்டு இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்துடன் ரூ3600 கோடியளவில் ஒப்பந்தம் போட்டது. இதில், ஒப்பந்தத்தில் இடைத்தரகர்களுக்கு ஒப்பந்த தொகையில் 10 சதவீதம் லஞ்சம் தரப்பட்டதாக புகார்கள் எழுந்தது. இத்தாலி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையும் நடைபெற்று வந்தது.
இந்தியாவுக்கு ஹெலிகாப்டர்களை விற்பனை செய்த விவகாரத்தில் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக குற்றம்சாட்டப்பாட்ட பின்மெக்கானிகா முன்னாள் தலைவர் ஜியுஸ்ப்பே ஒர்ஷி மற்றும் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் சிஇஓ புருனோ ஸ்பக்னோலினி இருவரையும் இத்தாலி நீதிமன்றம் கடந்த ஜனவரி 8ம் விடுவித்தது.
ஒர்ஷி மற்றும் புருனோ விடுதலை செய்யப்பட்டு 8 மாதம், 10 நாட்கள் ஆன நிலையில், கடந்த வாரம் ஏன் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள் என்பதற்கான விளக்கத்தை நீதிமன்றம் தெரிவித்தது. அந்த விளக்கத்தில், ‘ஊழல் நடந்ததற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நீதிமன்றம் அளித்த 322 பக்க உத்தரவில், “அளித்துள்ள ஆதரங்களை வைத்துபார்த்தால் காலவரிசைப்படி இப்படியொரு ஊழல் நடக்க வாய்ப்பில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் பயணம் :-
1999 - முக்கிய பிரமுகர்களுக்கு ஹெலிகாப்டர் வாங்கும் திட்டத்திற்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஒப்புதல் அளித்தது.
2004 - காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஹெலிகாப்டர்களின் எண்ணிக்கையை 8இல் இருந்து 12 ஆக உயர்த்தியது. அதில், 4 விஐபி அல்லாதவர்களுக்கு.
2010 - விஐபிகளுக்கு ஹெலிகாப்டர் வாங்க ரூ3,546 கோடி மதிப்பீட்டில் இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது.
2012 - 12 இல் 3 ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு வந்தது
2013 - பிப்ரவரி மாதம் ஊழல் குற்றச்சாட்டில் பின்மெக்கானிகா நிறுவனத்தின் தலைவர் கியுசெப்பே கைது செய்யப்பட்டார். அகஸ்டா வெஸ்ட்லாண்ட் சிஇஓ புருனோ ஸ்பக்னோலினி வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார்
2014 - தியாகி மற்றும் ஒர்ஷி இருவரையும் ஊழல் குற்றச்சாட்டில் இருந்து இத்தாலி கீழமை நீதிமன்றம் விடுவித்தது. பின்னர் வழக்கு இத்தாலியின் மிலன் நீதிமன்றத்திற்கு சென்றது. ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது.
2016 - மிலன் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக கூறி ஒர்ஷிக்கு நான்கரை வருடங்களும், ஸ்பங்னோலினிக்கு 4 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்தது.
வழக்கை மறுவிசாரணைக்கு இத்தாலி நீதிமன்றம் உத்தரவு
2018 - ஜனவரி மாதம் ஒர்ஷி மற்றும் ஸ்பங்னோலினியை வழக்கில் இருந்து விடுதலை செய்து மிலன் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தீர்ப்பு அளிக்கப்பட்ட 8 மாதங்களுக்கு பின்னர் அதற்கான விளக்கத்தை செப்டம்பரில் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது