பாகிஸ்தானில் மோசமான வெப்ப அலை நிலவும் சூழலில், நாட்டின் நகர்ப்புறங்களில் 10 மணிநேரம் வரையும், கிராமப்புற பகுதிகளில் 18 மணிநேரம் வரையும் மின்வெட்டு நீடிப்பதால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் நெருக்கடி, நாட்டின் மின்சார பிரச்னையை மோசமாக்கியுள்ளது. பாகிஸ்தானின் பல பகுதிகளில் நீண்ட நேரத்துக்கு தீவிர மின்வெட்டு ஏற்படுவதால் மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் தொழில்கள் கடுமையாக பாதித்துள்ளன.
எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை காரணமாக அனல்மின் நிலையங்களின் மின் உற்பத்தியில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டில் 6,000 முதல் 7,000 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய மின் துறை அதிகாரி, "வெப்பநிலை அதிகரிக்கும் நிலையில் மொத்த மின் பற்றாக்குறை 7,000 முதல் 8,000 மெகாவாட் வரை இருக்கும், வெப்பம் மற்றும் வறண்ட வானிலை வரும் நாட்களில் நீடித்தால் மின் பற்றாக்குறை மேலும் உயரக்கூடும்" என்று கூறினார்
தற்போது புனித ரமலான் மாதம் கொண்டாடப்பட்டு வரும் சூழலில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் காரிஸன் நகரத்தில் வசிப்பவர்கள் மின்வெட்டு காரணமாக விரக்தியடைந்துள்ளனர். தொடர் மின்வெட்டு தங்களது பணியை பாதித்துள்ளதாக வணிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
இதைப்போலவே, கைபர் பக்துன்க்வா, கராச்சி, சிந்து மற்றும் பலுசிஸ்தான் பகுதிகளும் கடும் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், கராச்சி மின்சார விநியோக நிறுவனம் மற்றும் இஸ்லாமாபாத் மின்சார விநியோக நிறுவனத்தின் (IESCO) அதிகாரிகள், தற்போதைய நெருக்கடியை சமாளித்து விரைவில் மின் உற்பத்தி தொடங்கும் என்று கூறியுள்ளனர். எரிபொருளின் பற்றாக்குறை மற்றும் பிற தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக பாகிஸ்தானில் உள்ள பல மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டதால் இதுபோன்ற மின்சார பற்றாக்குறை ஏற்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.